தனியார் நிறுவனங்களில் பணியாற்றுபவர்களின் சம்பளத்தில் மாதந்தோறும் ஒரு தொகை பிடித்தம் செய்யப்பட்டு தொழிலாளர் வைப்பு நிதியாக (பி.எப்.) சேமிக்கப்படுகிறது.
இதற்கு சரிசமமான தொகையை பணி அளிக்கும் நிறுவனமும் செலுத்தும்.
இந்த பணத்தில் ஒருதொகை பிடித்தம் செய்யப்பட்டு பணியாளர்களின் பணி ஓய்வுக்கு பின்னர் மாதாந்திர ஓய்வூதியமாக அளிக்கப்படுகிறது.
பயனாளர்கள் இறந்து விட்டால் அவர்களது கணவர் அல்லது மனைவிக்கு ஓய்வூதியம் வழங்கப்படும்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு முதல்முறை பதவியேற்றபோது இந்த ஓய்வூதியத் தொகை கடந்த 2014-ம் ஆண்டு ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டது.
ஆனால், இந்த தொகை இன்றைய வாழ்க்கை செலவினங்களுக்கு போதுமானதாக இல்லை.
எனவே, ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என பலதரப்பில் இருந்து மத்திய அரசுக்கு கோரிக்கை எழுந்து வருகிறது. தொழிலாளர் வைப்பு நிதி அலுவலகமும் இதற்கு பரிந்துரை செய்தது.
இந்நிலையில், பாராளுமன்ற மக்களவையில் இன்று இதே கோரிக்கையை வலியுறுத்தி பேசினர். இதற்கு பதிலளித்த மத்திய தொழிலாளர் நலத்துறை மந்திரி சந்தோஷ் குமார் கங்குவார், ‘இந்த கோரிக்கை தொடர்பாக தொழிலாளர் வைப்பு நிதி அதிகாரிகளுடன் மத்திய அரசு ஆலோசித்து வருகிறது’ என்று தெரிவித்தார்.
மேலும், பென்ஷன் தொகையை ஆயிரம் ரூபாயில் இருந்து 2 ஆயிரமாக உயர்த்தினால் ஆண்டுதோறும் அரசுக்கு கூடுதலாக 4,671 கோடி ரூபாயும், 3 ஆயிரமாக உயர்த்தினால் கூடுதலாக 11,696 கோடி ரூபாயும் செலவாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
0 comments:
Post a Comment