ஐ.எஸ் ஆயுததாரிகளின் தற்கொலை தாக்குதல்கள் தொடர்பில் இலங்கையுடன் இணைந்து சர்வதேச சமூகம் விசாரணைகளை முன்னெடுப்பது போல், போரின் இறுதி நாட்களில் இராணுவத்திடம் சரணடைந்த மற்றும் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகளுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க ஏன் சர்வதேச சமூகம் முன்வராது ஏன்?
இவ்வாறு கேள்வி எழுப்புகிறார்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அமைப்பின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் மரியசுரேஸ் ஈஸ்வரி ஊடகங்கள் ஊடாக சர்வதேச சமூகத்திடம் இந்தக் கேள்வியை எழுப்பியிருக்கின்றார். அவர் தொடர்ந்து தெரிவித்ததாவது,
இலங்கையில் இடம்பெற்ற ஐ.எஸ் என்ற சர்வதேச பயங்கரவாத அமைப்பு நடத்தியிருந்த தொடர் தற்கொலைத் தாக்குதலையடுத்து இலங்கைக்கு படையெடுத்துள்ள அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட பல மேற்குலக நாடுகளின் புலனாய்வாளர்கள் இலங்கை புலனாய்வாளர்களுடன் இணைந்து தாக்குதல்கள் குறித்த விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
குண்டு வெடிப்பு தொடர்பில் சர்வதேசம் இலங்கையுடன் இணைந்து விசாரணைகளை முன்னெடுக்கிறது. ஆனால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பில் இன்னமும் மௌனம் காத்துக்கொண்டிருப்பது ஏன்?
பத்து ஆண்டுகளுக்கு முன்னர் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட போரின் இறுதி நாள்களில் இராணுவத்தினரிடம் சரணடைந்த, ஒப்படைக்கப்பட்ட மற்றும் கைதுசெய்யப்பட்டும், கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடியலைகிறோம்.
தமிழர் தாயகமான வடக்கு கிழக்கின் எட்டு மாவட்டங்களிலும் கடந்த இரு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.
குண்டுவெடிப்புத் தாக்குதலையடுத்து அமுல்படுத்தப்பட்ட அவரசகால சட்டம் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுவரும் நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள எமது பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
அரசாங்கம் எமது போராட்டத்திற்கு தீர்வு தராது என்ற நிலையில் சர்வதேசமும் தமது பேராட்டம் நடைபெறுகின்றதா என்று அறிவதற்கும் முடியாத நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
எதிர்வரும் யூன் 08 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முல்லைத்தீவிற்கு பயணம் செய்யவுள்ளதாக அவிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் ஜனாதிபதி எமது மாவட்டத்திற்கு முன்னெடுக்கும் விஜயத்தின்போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களினதும், நில ஆக்கிரமிப்புக்கும் தீர்வுகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்-என்றார்.
0 comments:
Post a Comment