தமிழர்கள் பெருமளவில் வாழும் பகுதிகளிலேயே தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்படுகின்றது. இவ்வாறு தெரிவித்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர்.
அம்பாறை, கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக்கோரி மதகுருமார்கள் கடந்த திங்கட்கிழமை முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர், கிழக்கிலங்கையின் இந்துகுருமார் ஒன்றியத்தலைவர் சிவஸ்ரீ.க.கு.சச்சிதானந்த சிவம் குருக்கள், கல்முனை மாநகரசபை உறுப்பினர்களான அழகக்கோன் விஜயரெட்ணம், சந்திரசேகரம் ராஜன் உள்ளிட்டோர் குறித்த போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் போராட்டம் இடம்பெறும் இடத்திற்கு நேற்றைய தினம் சென்ற அத்துரலிய ரத்தின தேரர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே இதனைத் தெரிவித்தார். அவர் தெரிவித்ததாவது,
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை உருவாக்க வேண்டும். உங்களுக்குத் தேவையான முக்கியமான அதிகாரங்களான காணி அதிகாரங்கள், நிதி அதிகாரங்கள் என்பன உங்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை. எனவே அது தொடர்பாகத்தான் இன்று நீங்கள் உண்ணா விரதத்தில் இருக்கின்றீர்கள்.
தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து கொண்டிருக்கின்ற பிரதேசத்திலே அவர்களுக்கு அதிகாரத்தை வழங்காமல் அதனைத் தடுத்து வைத்துக் கொண்டு செயற்பட்டு கொண்டிருக்கிறார்கள். கல்முனையில் உள்ள முஸ்லிம் அரசியல் வாதிகளே இந்தச் சதிச்செயலைச் செய்கின்றனர் என்றார்.
0 comments:
Post a Comment