இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம், இனப்பிரச்சினைத் தீர்வு மற்றும் தமிழ், முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடப்படும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
குறுகிய நேரப் பயணம் ஒன்றை மேற்கொண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று முற்பகல் 11 மணியளவில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
இந்தியப் பிரதமருடன் இன்று பிற்பகல் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பேச்சுக்களை நடத்தவுள்ளார். இந்நிலையில் இந்த கலந்துரையாடல் தொடர்பாக கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், சிங்கள நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும், இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னர் தமிழ், முஸ்லிம் மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவித்தார்.
அத்தோடு அரசியல் கைதிகளின் விடுதலையில் காணப்படும் இழுபறிகள், வடக்கு கிழக்கில் மீள்குடியமர்வில் எதிர்கொள்ளப்படும் சிக்கல்கள் தொடர்பாகவும் ஆராயப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் இந்தியப் பிரதமருடன் கலந்துரையாடப்படும் என சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment