திருச்சி மாவட்ட அ.ம.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் பேசியதாவது:-
தேர்தலில் தோல்வி அடைந்த போது எனக்கு வருத்தம் இருந்தது. ஆனால் அதற்கான காரணம் தெரிந்த பின் வருத்தப்படவில்லை. மின்னணு வாக்குப்பதிவு எந்திர முறையை மாற்ற வேண்டும். ஓட்டுச் சீட்டு முறை வேண்டும். நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல் என்பது ஒரே கட்சி ஆட்சி அமைப்பதற்காக தான். மாநில கட்சிகளை இல்லாமல் செய்வதற்காக ஒரே தேர்தல், ஒரே தேசம் என்று கூறுகின்றனர்.
மோடி இருக்கிற வரை நாம் ஆட்சிக்கு வர முடியாது என ஒரு சிலர் கூறி வேறு கட்சிக்கு தாவுகின்றனர். ஒரு சிலர் குழம்பி போய் இருக்கிறார்கள். அவர்கள் மற்றவர்களையும் குழப்பி கொண்டிருக்கிறார்கள். அது போன்றவர்களிடம் ஒரு முடிவு எடுத்து இந்த கட்சி தேறும் என நினைத்தால் இருங்கள். இல்லையென்றால் வேலையை பார்த்து விட்டு செல்லுங்கள் என தெரிவித்து விட்டேன்.
நான் வசிக்கிற பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் நமக்கு 14 ஓட்டுகள் தான் விழுந்துள்ளது. எனக்கு தெரிந்த நபர்களே 100 பேர் வரை வாக்களித்திருப்பார்கள். நம்முடைய வாக்குகள் எங்கே போனது என்று தான் கேள்வி.
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் பா.ஜ.க.வுக்கு தானே சென்றிருக்க வேண்டும் என நீங்கள் கேட்பீர்கள். அதை கேட்காமல் இருப்பதற்காகத்தான் தி.மு.க.வுக்கு மாற்றிவிட்டனர். தி.மு.க. வாக்கு வித்தியாசத்தை பார்த்தாலே தெரியும். நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவோம். அதேபோல் வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தலும் வரும். அதிலும் போட்டியிடுவோம்.
தண்ணீர் பிரச்சினையால் உள்ளாட்சி தேர்தலை நடத்த மாட்டார்கள். 1,100 வாக்குச்சாவடிகளில் நமக்கு பூஜ்யம் விழுந்தது எப்படி? என்பதை முறையிட உள்ளோம். அதற்கான காரணத்தை ஆராய்ந்து வருகிறோம். சிலர் கட்சியை விட்டு சென்றார்கள் என்ற செய்தி வரும். அதைப்பற்றி கவலைப்படாதீர்கள். வரும் தேர்தல்களில் அ.ம.மு.க. மாபெரும் வெற்றி பெறும். இரட்டை இலை சின்னத்தையும், அ.தி.மு.க.வையும் மீட்டெடுப்போம்.
0 comments:
Post a Comment