நாட்டில் பாரிய பாதுகாப்பு பிரச்சினை இருக்கின்ற சந்தர்ப்பத்தில், கல்முனையில் உண்ணாவிரதம் இருப்பதன் பின்னணியில் அரசியல் ரீதியான சூத்திரதாரிகள் இருக்கின்றதாகவும், அந்த அரசியல் சுத்திரதாரிகளுக்கு தேவையாக இருப்பது நாட்டின் சுமுக நிலமையை குழப்பி தொடர்ச்சியாக பதற்ற நிலையில் வைத்துக் கொள்வதாகும் என்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
நேற்று பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின்போது கருத்துத் தெரிவிக்கும்போதே பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் இவ்வாறு தெரிவித்தார்.
ஆவர் மேலும் தெரிவிக்கையில்,
அத்துரலிய ரத்ண தேரர் கல்முனை பிரதேசத்துக்கு சென்று வந்துள்ளதாக என்னிடம் கூறினார். அங்கு தற்போது குழப்ப சூழ்நிலை போன்று தோன்றியுள்ளது. அதுவும் சாகும் வரை உண்ணாவிரம் என்ற கோரிக்கையினால்தான் அங்கு குழப்ப சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது அப்பிரதேசத்தில் இன்னுமொரு குழப்பத்துக்கு வழிவகுக்கும் என்ற சந்தேகம் தோன்றியுள்ளது.
வஜிரே அபேவர்தண இன்று தனது அமைச்சின் மூலம் அறிவித்தலொன்றை வெளியிடுவார் என்று நம்புகிறோம். இது தொடர்பில் சில பிழையான கருத்துக்கள் வெளியாகியிருந்தன, பாராளுமன்றத்திலும் பேசப்பட்டது, நானும் அதற்கு உடன்பட்டதாக பிழையாக சொல்லப்பட்டன. அது தொடர்பாக நான் தெளிவுபடுத்த வேண்டும்.
தமிழ் மக்களுக்காக கல்முனை வடக்கு பிரதேச செயலளர் பிரிவு வழங்கப்பட வேண்டும் என்ற கருத்து நீண்ட காலமாக இருந்து வருகிறது. இது தொடர்பில் எல்லை மீள் நிர்ணம் செய்யப்பட வேண்டியதோடு, குறித்ததொரு இனத்துக்காக தனியான செயலகம் அமைப்பது தொடர்பில் பல கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன.
இது சம்பந்தமாக ஆராய்வதற்கு அரசாங்கம் குழுவொன்றை அமைத்துள்ளது. இதன் மூலம், எல்லா சமூகத்திற்கும் நீதியைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்கின்ற நிலைப்பாட்டில் நாங்களும் இருக்கின்றோம்.
நாட்டில் பாரிய பாதுகாப்பு பிரச்சினை இருக்கின்ற சந்தர்ப்பத்தில், இதன் பின்னணியில் அரசியல் ரீதியான சூத்திரதாரிகள் இருக்கின்றன என்பதையும் கூற வேண்டும். அந்த அரசியல் சுத்திரதாரிகளுக்கு தேவையாக இருப்பது நாட்டின் சுமுக நிலமையை குழப்பி தொடர்ச்சியாக பதற்ற நிலையில் வைத்துக் கொள்வதாகும். என அவர் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment