பாடசாலைக்கு அருகாமையில் தொலைத் தொடர்புக்கோபுரம் (ரவர்) அமைப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட பணிகள் மக்களின் கடும் எதிர்ப்புக் காரணமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது.
வவுனியா இறம்பைக்குளம் மயானத்திற்கு அருகில் நேற்று முன்தினம் தனியார் நிறுவனம் ஒன்று வீதிக்கு அருகில் தொலைத் தொடர்புக் கோபுரம் அமைக்கும் பணிகளை ஆரம்பித்திருந்தது.
இதையறிந்த அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து தொலைத் தொடர்புக் கோபுரம் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பைத் தெரிவித்துள்ளதுடன் கட்டட ஒப்பந்தப்பணியாளர்களுடன் தர்க்கத்திலும் ஈடுபட்டனர்.
இதையடுத்து, சம்பவம் தொடர்பில் நகரசபையின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு தொலைத் தொடர்புக் கோபுரம் அமைக்கும் பணிகளை தற்காலிகமாக இன்றிலிருந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நகரில் பல்வேறு பகுதிகளில் இவ்வாறான கோபுரங்களை அமைத்து எதிர்காலத்தில் அவற்றைத் தொலைத் தொடர்புக் கோபுரம் போன்று பாவிப்பதற்கு குறித்த நிறுவனம் முயற்சித்துள்ளதாகத் தெரிவித்து மக்கள் தமது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, குறித்த கோபுரம் அமைப்பதற்கு அனுமதி விண்ணப்பம் நகரசபையிடனம் வழங்கப்பட்ட நிலையில் அதற்கான அனுமதி பெற்றுக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment