வவுனியா, பண்டாரிக்குளம் பகுதியில் கடமையாற்றும் சமுர்த்தி உத்தியோகத்தரை இடமாற்றுமாறு கோரி அப்பகுதி சமுர்த்தி பயனாளிகளால் மாவட்டச் செயலர் ஐ.எம்.ஹனீபாவிடம் மகஜர் ஒன்று இன்று கையளிக்கப்பட்டது.
பண்டாரிக்குளம் பகுதிக்கு கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் புதிய சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சமுர்த்தி உத்தியோகத்தர் அங்குள்ள சமுர்த்தி பயனாளிகள் தொடர்பில் கரிசனை அற்றவராகவும், சமுர்த்தி பயனாளிகளான முதியவர்களைப் பாதிக்கும் வகையில் வார்த்தை பிரயோகங்களைப் பயன்படுத்துவது மற்றும் பாரபட்சம் காட்டுவதாகவும் தெரிவித்து குறித்த உத்தியோகத்தருக்கு உடனடியாக இடமாற்றம் வழங்குமாறு கோரியே குறித்த மகஜர் கையளிக்கப்பட்டது.
இதற்கு முன்னர் பணியாற்றிய சமுர்த்தி உத்தியோகத்தரை மீள நியமிக்குமாறும் அல்லது வேறு புதிய ஒரு உத்தியோகத்தரை நியமிக்குமாறும் அவர்கள் மாவட்டச் செயலரிடம் கோரிக்கை முன்வைத்தனர்.
மாவட்ட சமுர்த்தி பொறுப்பதிகாரியை தொடர்பு கொண்டு இது தொடர்பில் பேசிய மாவட்டச் செயலர் ஐ.எம்.ஹனீபா, வவுனியா பிரதேச செயலர் ஊடாக இது தொடர்பில் கவனம் செலுத்துவதாகத் தெரிவித்து பிரதேச செயலாளிடம் குறித்த மக்களை வழிப்படுத்தியிருந்தார்.
இதேவேளை, சமுர்த்தி பயனாளிகள் வவுனியா பிரதேச செயலர் கா.உதயராஜா அவர்களிடம் இரு வாரங்களுக்கு முன்னர் இது தொடர்பில் மகஜர் ஒன்றை கையளித்த போதும் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்திருந்தனர்.
0 comments:
Post a Comment