தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவதால், அதனைப் போக்க கடல்நீரைக் குடிநீராக்கும் 20 ஆலைகளை மத்திய அரசு உருவாக்க வேண்டும் என மக்களவையில் ஸ்ரீபெரும்புதூர் உறுப்பினர் டி.ஆர்.பாலு வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து மக்களவையின் கேள்வி நேரத்தில் இன்று (புதன்கிழமை) உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் தெரிவிக்கையில், “தமிழகத்தில் தண்ணீர்த் தட்டுப்பாடு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. 140 ஆண்டுகளுக்குப் பிறகு, தண்ணீருக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதற்காக தி.மு.க. ஸ்டாலின் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்துள்ளார்.
நிதி ஆயோக் அறிக்கையில் இன்னும் சில ஆண்டுகளில் இந்தியாவின் 21 நகரங்களில் தண்ணீரே பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு, 2 இலட்சம் மக்கள் உயிரிழப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது. 60 கோடி மக்களுக்குத் தண்ணீர் இருக்காது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னையில் தினந்தோறும் 10 ஆயிரம் லொறிகளில் தண்ணீர் நிரப்பப்பட்டு மக்களுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. இதுதான் மெட்ரோ நகரத்தின் நிலை.
சென்னை நகருக்கு நான்கு ஏரிகளே நீரை வழங்குகின்றன. செம்பரம்பாக்கம், சோழவரம், ரெட் ஹில்ஸ் மற்றும் பூண்டி ஆகியவையே அந்த ஏரிகள். அவை அனைத்தும் தற்போது வறண்டுவிட்டன.
காவிரி, வைகை, தென்பெண்ணை, பாலாறு, அமராவதி என தமிழகத்தில் அனைத்து நதிகளும் வறண்டு பாலைவனம் போல காட்சியளிக்கின்றன. இதனால் தண்ணீரை பொதுமக்களுக்கு வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே மத்திய அரசு ரயில் நீர்த் தாங்கிகள் மூலம் நீரை விநியோகிக்க உடனடியாக அனுமதியளிக்க வேண்டும்.
குறைந்தபட்சம் 20 இடங்களில் கடல்நீரைக் குடிநீராக்கும் ஆலைகளை நிறுவ வேண்டும். சென்னை மக்களுக்குத் தடையின்றி தண்ணீர் கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்யவேண்டும்” என்று தனது கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
0 comments:
Post a Comment