சஹ்ரானின் போதனைகளில் கலந்துகொண்ட முஸ்லிம்கள் 51 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெறுமனே போதனைகளில் இவர்கள் கலந்துகொண்டவர்களாக இருந்தாலும் கூட இவர்களை விடுதலை செய்ய முடியாது. அவ்வாறு விடுவதென்றாலும் இவர்களை புனர்வாழ்வுக்கு உட்படுத்தியே விடுதலை செய்ய முடியும். இவ்வாறு தெரிவித்துள்ளார் பிரதி அமைச்சர் நளின் பண்டார.
அவசர காலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்துக்கு நீட்டிக்கும் விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் தெரிவித்ததாவது,
ஏப்ரல் 21இல் இடம் பெற்ற தாக்குதலைத் தொடர்ந்தே மீண்டும் அவசர காலச் சட்டத்தைக் கொண்டுவர வேண்டியேற்பட்டது. இது தொடர்பில், முப்படையினரும் பொலிஸாரும் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு அவசரகால சட்டம் முக்கியமானது.
அவசர கால சட்டத்தின் கீழ் இராணுவம் மற்றும் ஏனைய பாதுகாப்பு படைகளுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டு அவர்களுக்கும் தேசிய பாதுகாப்பு விடயத்தில் பாரிய பொறுப்பைக் கொடுத்திருப்பது நல்ல விடயம் என்றே கருதுகின்றோம்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து இதுவரையில் 2 ஆயிரத்து. 389 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 236 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் 189 பேர் தடுப்புக் காவலிலும் வைக்கப்பட்டுள்ளனர். 3 பேர் அவசர காலச் சட்டத்தின் கீழும் 186 பேர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் 263 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அத்தோடு 94 பேர் தொடர்பாக சட்ட மா அதிபரின் ஆலோசனை பெற்றுக்கொள்ளப்படவுள்ளதுடன் 7 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் கைதாகியவர்களில் 79 பேர் பிரதான சந்தேக நபர்களாவர். குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பில் 29 பேரும் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பொறுப்பில் 29 பேரும் கொழும்பு குற்றவியல் விசாரணைப் பிரிவின் பொறுப்பில் 29 பேரும் இருக்கின்றனர்.என்றார்.
0 comments:
Post a Comment