பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக காங்கிரஸ் தலைமையில் வலுவான கூட்டணி அமையாததால் மோசமான தோல்வி ஏற்பட்டது. பா.ஜனதா மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.
மேற்கு வங்காள மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. பாரதீய ஜனதாவை கடுமையாக விமர்சனம் செய்து வந்த அவர் அந்த கட்சிக்கு எதிராக தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க தவறி விட்டார்.
திரிணாமுல் காங்கிரஸ், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளும் தனித்தனியாக போட்டியிட்டன. இது பா.ஜனதாவுக்கு சாதகமாக அமைந்தது. அந்த கட்சி 18 இடங்களை மேற்கு வங்காளத்தில் கைப்பற்றி முத்திரை பதித்தது.
இந்த நிலையில் பா.ஜனதாவுக்கு எதிராக மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளும் ஓரணியில் இணைய வேண்டும் என்று மம்தா பானர்ஜி விருப்பம் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
மேற்கு வங்காளத்தில் அந்நிய கலாச்சாரத்தை உருவாக்க பா.ஜனதா முயன்று வருகிறது. பாத்பாராவில் தொடரும் வன்முறை சம்பவங்களை நேரில் காண்பதன் மூலம் பா.ஜனதாவுக்கு வாக்களித்தால் என்ன நடக்கும் என்பதை தற்போது மக்கள் அறிந்து உள்ளார்கள்.
பா.ஜனதாவை எதிர்ப்பதற்கு திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ், மார்க்சிஸ்டு ஆகிய 3 கட்சிகளும் ஓரணியில் இணைய வேண்டும். அதற்காக இந்த 3 கட்சிகளும் அரசியல் ரீதியாக ஓரணியில் திரள வேண்டும் என்ற அர்த்தமாகி விடாது.
தேசிய அளவிலான பொது பிரச்சினையில் மட்டுமே இந்த கட்சிகள் ஓரணியாக இருக்க வேண்டும்.
அரசின் நலத்திட்டம் உதவிகளை தவறாக பயன்படுத்தக் கூடாது என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினருக்கு நான் உத்தரவிட்டுள்ளேன். எனது தொண்டர்களை ஒழுங்குப்படுத்துவதற்கு முயற்சி செய்தேன். இதில் தவறு எதுவும் இல்லை.
ஏனென்றால் திரிணாமுல் காங்கிரஸ் மக்களுக்கானது. அதே நேரத்தில் எனது கட்சி நிர்வாகிகள் மீது ஆதாரம் இல்லாமல் குற்றம் சாட்ட யாருக்கு உரிமை இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
0 comments:
Post a Comment