குண்டுத்தாக்குதலில் தந்தையினை இழந்து நானும் வேதனையடைந்துள்ளேன். ஆகையால் அண்மையில் நடைபெற்ற தாக்குலில் இழப்புகளை எதிர்கொண்டவர்களின் வேதனையினை என்னால் உணரமுடியுமென வீடமைப்பு, நிர்மாணத்துறை, கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே சஜித் பிரேமதாச இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,
”குண்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட உங்களுக்கு என்னால் முடிந்த உதவிகளை நிச்சயம் செய்து தருவேன்.
இந்த சம்பவத்தினால் ஏற்பட்ட துன்பத்தை வார்த்தைகளால் கூறிவிட முடியாது. நாங்கள் எவ்வளவு பணம் கொடுத்தாலும் நன்மைகளை செய்தாலும் நீங்கள் இழந்த உறவுகளை திரும்பவும் கொண்டுவந்து உங்களிடம் தரமுடியாது.
உங்களுடைய சூழ்நிலை எனக்கு நன்றாகப் புரிந்துகொள்ள முடிகின்றது. ஏனெனில் நானும் எனது தந்தையை இவ்விதமான ஒரு சூழ்நிலையில்தான் இழந்தேன். ஆகையாலேயே உங்களுடைய வேதனையையும் என்னால் புரிந்துகொள்ள முடிகின்றது.
தீவிரவாதிகளின் தாக்குதலினால் நீங்கள் இழந்த உங்களுடைய குழந்தைகளுக்கு, பெற்றோர்களுக்கு பதிலாக எங்களால் முடிந்த வரையறையற்ற உதவிகளை உங்களுக்கு செய்வதற்கு தயாராக இருக்கின்றோம்.
உங்களுக்கு உதவி செய்வதில் இருக்கக்கூடிய கட்டுப்பாடுகள், தடைகள் அனைத்தையும் தகர்த்து எமது அமைச்சின் ஊடாக உங்களுக்கு உதவிகளை செய்வோம். உங்களுடைய வாழ்க்கையை பழைய நிலைக்கு கொண்டுவருவதற்கு நாங்கள் முயற்சிக்கின்றோம்.
இந்த அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தன்னைத்தானே வலுப்படுத்திக்கொள்ளும் வகையில் வாழ்வாதாரங்களை உயர்த்தும் செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படும்.
இதன்படி முதற்கட்டமாக சமூகத்தை வலுவூட்டும் நிகழ்வு நிறைவேற்றப்படும். இரண்டாம் கட்டமாக பொருளாதாரத்தை கட்டியெழுப்புதல் தொடர்பான செயற்றிட்டங்கள் நிறைவேற்றப்படும். மூன்றாம் கட்டமாக பிள்ளைகளுக்கும் இளைஞர் யுவதிகளுக்குமான கல்வி மேம்பாட்டிற்கான திட்டங்கள் செயற்படுத்தப்படும். நான்காவதாக கலாசார சமய ரீதியான மேம்பாட்டிற்கான திட்டங்கள் செயற்படுத்தப்படும்.
மேலும் ஐந்தாவதாக ஒருவருக்கு காணப்படுகின்ற விஷேட திறமைகள் வளங்களை மேம்படுத்துவதான சமூக கலாசார ரீதியில் அவர்களை உயர்ந்த நிலைக்கு கொண்டுவருவதற்கான செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்படும். ஆறாவதாக இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட, உறவுகளை இழந்த, காயமுற்றவர்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுத்தல் அல்லது வீடுகளை திருத்திக் கொடுத்தல் என்ற செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
குறித்த செயற்றிட்டத்திற்காக 95மில்லியன் ரூபாவை நான் ஒதுக்கியிருக்கின்றேன்” என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment