பிரித் ஓதும் நிகழ்வில் அனைத்து உத்தியோகத்தர்களையும் வெண்ணிற ஆடையுடன் கலந்துகொள்ளுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
வவுனியா பிரதேச செயலகத்தின் அனைத்து கிளைத் தலைவர்களுக்கும் பிரதேச செயலரினால் கையொப்பமிட்டு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
24.6.2019 அன்று மாலை 6 மணியளவில் பிரித் ஓதும் நிகழ்வு இடம்பெறவுள்ளதால் அனைத்து உத்தியாகத்தர்களையும் தவறாது பங்குபற்றுமாறு அறிவுறுத்தல் வழங்குமாறும் அவர்கள் வெண்ணிற ஆடை அணிந்து வருமாறு தெரியப்படுத்துமாறும் குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா பிரதேச செயலகம் தமிழ் மக்களுக்குரிய பிரதேச செயலகமாக காணப்படும் நிலையில் தமிழ் உத்தியோகத்தர்களுக்கு பிரித் ஓதும் நிகழ்வை ஏன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனப் பலரும் விசனம் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், தமிழ் உத்தியோகத்தர்களை பௌத்த மத அனுஸ்டானத்தில் பங்குபற்ற அழைத்தது மாத்திரமின்றி பௌத்தர்கள் அணியும் உடையையும் அணியச்சொல்வது ஏற்புடையதல்ல எனவும் கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை அண்மைக் காலமாக வவுனியாவில் பல இடங்களிலும் சிங்கள மயமாக்கல் மற்றும் பௌத்த சின்னங்களை பிரதிஸ்டை செய்யும் செயற்பாடுகளும் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment