வவுனியா கணேசபுரம், சமயபுரம் கிராமத்திலுள்ள மக்கள் ஒன்றிணைந்து தமக்கு வீட்டுத்திட்டம் வழங்குமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டம் வவுனியா மாவட்ட தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரபையின் அலுவலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டது.
நீண்டகாலமாக வீட்டுத்திட்டம் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டு தமக்கான வீட்டுத்திட்டம் வழங்கப்படவில்லை. வீட்டுத்திட்டத்திற்கான தீர்வைப் பெற்றுத்தருமாறு கோரியிருந்ததாகவும் அடிப்படை வசதியற்ற வீட்டில் வசித்து வருவதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
அவ்விடம் சென்ற வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே. காதர் மஸ்தான் போராட்டம் மேற்கொள்வதற்கான காரணத்தைக் கேட்டறிந்து கொண்டார்.
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரபையின் மாவட்ட முகாமையாளருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கணேசபுரம், சமயபுரம் கிராமப்பகுதி மக்களின் வீட்டுத்திட்டம் குறித்து கேட்டறிந்தார்.
அப்பகுதி மக்களின் போராட்டம் குறித்தும் நிலைமைகளை எடுத்துக்கூறி தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் மாவட்ட முகாமையாளரிடம் எடுத்துக் கூறினார்.
கட்சி பேதம் இன்றி பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீட்டுத்திட்டத்தைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் விடயம் குறித்து மாவட்டச் செயலருக்கு தெரியப்படுத்தினார்.
முக்கிய கலந்துரையாடல் ஒன்றில் தான் இருப்பதாகத் தெரிவித்து மாவட்ட திட்டப்பணிப்பாளரை போராட்ட இடத்திற்கு மாவட்டச் செயலர் அனுப்பிவைத்தார்.
மாவட்ட திட்டப்பணிப்பாளர், தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் அலுவலர்கள், தொழிநுட்ப உத்தியோகத்தரை மக்களின் போராட்ட இடத்திற்கு அழைத்து விரிவான கலந்துரையாடலை மேற்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர், பாதிக்கப்பட்ட மற்றும் வீட்டுத்திட்டத்தில் பெயர் விடுபட்ட மக்களுக்கான வீட்டுத்திட்டத்தைக் கேட்டறிந்து நேரில் சென்று நிலைமைகளை ஆராய்ந்து வீட்டுத்திட்டங்களை வழங்க இன்று நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அவர்களிடம் தெரிவித்துள்ளார்.
அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் கே.காதர் மஸ்தானின் வாக்குறுதியைடுத்து போராட்டக்காரர்கள் தமது போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றுள்ளனர்.
இதேவேளை நேற்று சமயபுரம் கிராமத்திலுள்ள ஒரு பகுதிக்கு வீட்டுத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டிவைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்தே அப்பகுதியிலுள்ள விடுபட்ட மக்கள் தமக்கான வீட்டுத்திட்டம் வழங்கவேண்டும் என்று கோரி இன்றைய தினம் போராட்டத்தை மேற்கொண்டனர்.
0 comments:
Post a Comment