தென்அமெரிக்க கண்டத்து அணிகளுக்கான 46-வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி தொடர் பிரேசிலில் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த போட்டியில் தென்அமெரிக்க கண்டத்தை சேர்ந்த 10 அணிகளுடன், ஆசிய கண்டத்தை சேர்ந்த ஜப்பான், கத்தார் ஆகிய அணிகள் சிறப்பு அழைப்பின் பேரில் கலந்து கொண்டுள்ளன. அணிகள் 3 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்குள் நுழையும். அத்துடன் 3-வது இடத்தை பெறும் சிறந்த 2 அணிகளும் கால்இறுதிக்கு தகுதி பெறும்.
சாவ் பாப்லோவில் நேற்று முன்தினம் நடந்த தொடக்க லீக் ஆட்டத்தில் (ஏ பிரிவு) 8 முறை சாம்பியனான பிரேசில் அணி, பொலிவியாவை சந்தித்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் பிரேசில் அணி ஆதிக்கம் செலுத்தினாலும், பொலிவியா அணியின் தடுப்பு அரணை தகர்க்க முடியவில்லை.
இதனால் முதல் பாதியில் கோல் எதுவும் விழவில்லை.50-வது நிமிடத்தில் பிரேசில் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதனை பயன்படுத்தி பிலிப் காட்டினோ அருமையாக முதல் கோலை அடித்தார்.
53-வது நிமிடத்தில் சக வீரர் பிர்மினோ கோல் எல்லையை நோக்கி அடித்த பந்தை பிரேசில் அணி வீரர் பிலிப் காட்டினோ தலையால் முட்டி கோலாக்கினார்.
85-வது நிமிடத்தில் பிரேசில் அணியின் மாற்று ஆட்டக்காரர் இவெர்டன் 3-வது கோலை அடித்தார். பொலிவியா அணியால் கடைசி வரை பதில் கோல் திருப்ப முடியவில்லை. முடிவில் பிரேசில் அணி 3-0 என்ற கோல் கணக்கில் பொலிவியாவை தோற்கடித்து வெற்றியுடன் போட்டியை தொடங்கியது.
ஆட்டநாயகன் விருது பெற்ற பிரேசில் வீரர் பிலிப் காட்டினோ அளித்த பேட்டியில், ‘இது எங்களுக்கு கடினமான போட்டியாகும்.
முதல் பாதி ஆட்டம் முடிவில் அணியின் பயிற்சியாளர் டைட் பந்தை கட்டுப்பாட்டில் வைத்து இருப்பதில் சிறப்பாக செயல்படுவதில் அதிக கவனம் செலுத்தும் படி அறிவுறுத்தினார்.
அதனை நாங்கள் சரியாக செய்தோம். முதல் கோல் ஆட்டத்தின் போக்கை மாற்றியது’ என்று தெரிவித்தார்.
0 comments:
Post a Comment