ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எதிர்ப்பையும் மீறி செயற்பட்டு வரும் நாடாளுமன்ற தெரிவுக்குழு மீண்டும் கூடவுள்ளது.
அதன்படி அந்தக் குழுவின் 7ஆவது அமர்வு இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் 2 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.
இன்றைய தினம் சாட்சியம் வழங்குவதற்காக சிலோன் தௌஹீத் ஜமாத்தின் செயலாளர் அப்துல் ராசிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அத்தோடு காத்தான்குடி பிரதேசத்தில் உள்ள பல்வேறு முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகளும் சாட்சியம் வழங்க அழைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் உறுப்பினர்களிடையே நேற்று கலந்துரையாடலொன்று இடம்பெற்றிருந்தது.
இதன்போது தொடர்ந்தும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் முன்னிலையாகவுள்ளவர்கள் தொடர்பாக ஆராயப்பட்டது. மேலும் இனிமேல் தெரிவுக்குழுவில் முன்னிலையாகும் பாதுகாப்பு தரப்பினர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்படாமல் இரகசியமாகப் பேண தீர்மானிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும் நேற்றைய அமர்விற்கு ஊடகங்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல்கள் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழு இதுவரையில் ஆறு தடவைகள் கூடியுள்ளது.
இதுவரை இடம்பெற்ற அமர்வுகளில் பாதுகாப்பு செயலாளர் சாந்த கோட்டேகொட, தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் தலைமை அதிகாரி சிசிர மெண்டிஸ் மற்றும் நாலக டி சில்வா, பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி, கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா, காத்தான்குடி பொலிஸில் சேவையாற்றிய முன்னாள் பொறுப்பதிகாரி மற்றும் தற்போதைய பொறுப்பதிகாரி ஆகியோருடன், சுஃபீ முஸ்லிம் அமைப்பின் பிரதிநிதி ஆகியோரிடம் சாட்சியங்கள் பெறப்பட்டுள்ளன.
இவர்கள் வழங்கிய சாட்சியங்கள் மூலம் பல உண்மைகள் அம்பலமாகியுள்ளன. இதனையடுத்து நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிற்கு எதிர்ப்புகளும் வெளியிடப்பட்டன. குறிப்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவுக்குழுவின் செயற்பாடுகளை நிறுத்துமாறு கோரியிருந்தார்.
எனினும் சர்ச்சைகளுக்கு மத்தியில் குறித்த குழுவின் செயற்பாடுகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment