கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் வாக்குமூலமளிக்க தனக்கும் சந்தர்ப்பம் வழங்குமாறு அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எச்.ஏ. ஹலீம் பாராளுமன்ற விஷேட தெரிவுக்குழுவின் பிரதித்தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி ஜயம்பதி விக்கிரமரட்ணவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் முன்னாள் அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் கருத்து தெரிவிக்கையில்; ‘எனது பதவிக்காலத்தில் நான் அநேகமான தௌஹீத் பள்ளிவாசல்களைப் பதிவு செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பள்ளிவாசல்கள் தௌஹீத் பள்ளிவாசல்கள், தப்லீக் பள்ளிவாசல்கள் என வேறுபடுத்தி பதிவு செய்யப்படுவதில்லை. எனது பதவிக்காலத்தில் தௌஹீத் பள்ளிவாசல்கள் பதிவு செய்யப்படவில்லை.
பள்ளிவாசல்கள் பதிவின்போது அதற்கான ஆவணங்களை வக்பு சபை பரிசீலனை செய்கிறது. உரிய ஆவணங்கள் இருந்தாலே முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் பள்ளிவாசலை பதிவு செய்கிறது. பள்ளிவாசல் பதிவுகளில் அமைச்சரின் பங்களிப்பு இல்லை. இது தொடர்பில் தெரிவுக்குழுவில் நான் விளக்கமளிக்க வேண்டும். இனவாதிகள் பள்ளிவாசல் பதிவுகளை காரணம் காட்டி என் மீது குற்றம் சுமத்துகின்றனர். எனது சகோதரர் தௌஹீத் ஜமாஅத்திற்கு உதவிகள் வழங்கியுள்ளதாக மேல்மாகாண முன்னாள் ஆளுநர் வாக்குமூலம் வழங்கியுள்ளார். இந்தக் குற்றச்சாட்டுக்கு எதிராக வாக்குமூலமளிக்க எனது சகோதரருக்கும் சந்தர்ப்பம் வழங்குமாறு கோரியிருக்கிறேன்’ என அவர் மேலும் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment