சகாப்தம் படம் மூலம் நடிகராக அறிமுகமானார் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன். இப்படத்தை தொடர்ந்து மதுர வீரன் படத்திலும் நடித்திருந்தார். தற்போது புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். இந்த முறை, அவர் தனது தந்தை மிக வெற்றிகரமாக இருக்கும் ஒரு மண்டலத்திற்குள் நுழைந்திருக்கிறார்.
ஜி எண்டர்டெயினர்ஸ் தயாரிப்பில் 'புரொடக்ஷன் நம்பர் 1' என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் மூலம், இயக்குனர் சிவாவிடம் இணை இயக்குனராக வீரம், வேதாளம், மற்றும் விவேகம் படங்களில் பணிபுரிந்த ஜி.பூபாலன் இயக்குனராக அறிமுகமாகிறார்.
போலீஸ் திரைப்படங்கள் என்றாலே எப்பொழுதும் இருக்கையின் விளிம்பில் அமர்ந்து பார்க்க வைக்கும் திரில்லர் படங்களாக தான் அமைந்திருக்கின்றன. ஆனால் பூபாலன் வேறு விதமான ஒரு கதையை சொல்ல இருக்கிறார். இப்படம் குறித்து அவர் கூறும்போது, “போலீஸ் திரைப்படங்கள் என்றாலே பெரும்பாலும் துரத்தல், பிடித்தல் என்ற வகையிலேயே இருக்கும், ஆனால் நாங்கள் மிகவும் யதார்த்தமான விதத்தில் சித்தரித்திக்கிறோம். இது ஆக்ஷன் மற்றும் எமோஷன் கொண்ட வண்ண மயமான பொழுதுபோக்கு படம். கல்லூரி படிப்பை முடித்து, காவல் துறையில் பயிற்சி பெற்று, மீண்டும் தனது சொந்த ஊருக்கு வந்து சேவை செய்யும் ஒரு இளைஞனின் கதை" என்றார்.
இந்த படத்தில் சண்முக பாண்டியன் ஜோடியாக ரோனிகா நடிக்கிறார். வம்சி கிருஷ்ணா, பவன், சாய் தீனா, அழகம் பெருமாள் ஆகியோர் வில்லன்களாக நடிக்கிறார்கள். தேசிய விருது பெற்ற நடிகை அர்ச்சனா, நாயகனின் தாயாக நடிக்கிறார். அம்மா, மகன் கதாபாத்திரங்களுக்கு இடையிலான உணர்வுபூர்வமான பிணைப்பு இந்த படத்தின் முக்கியமான சிறப்பம்சங்களில் ஒன்றாகும்.
அருண்ராஜ் இசையமைக்க இருக்கும் இப்படத்திற்கு, முரளி கிரிஷ் ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார். இதன் படப்பிடிப்பு வரும் ஜூலை மாதம் துவங்குகிறது. தமிழ் சினிமாவின் மிக முக்கிய பிரபலம் இந்த படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட்லுக் போஸ்டரை மிக விரைவில் வெளியிட இருக்கிறார்.
0 comments:
Post a Comment