சஹ்ரானின் முகப்புத்தகம், இணைய பக்கங்களை கண்காணித்ததில் அவரது நகர்வுகள் நல்லதல்ல என்பதை நான் அறிந்துகொண்டேன். சஹ்ரானின் வீடியோக்களை பார்க்கும் போது அது ஐ. எஸ். ஐ. எஸ் சார்பாகவே இருந்தது. ஆகவே நிச்சயமாக இவருக்கும் ஐ. எஸ். ஐ. எஸ் அமைப்பிற்கும் தொடர்புகள் இருப்பது தெரிந்தது. இது குறித்து வாராந்தம் பொலிஸ்மா அதிபருக்கு நான் நேரடியாக தெரிவித்தேன். வாராந்த புலனாய்வு மீளாய்வுக் கூட்டங்களிலும் தனிப்பட்ட ரீதியிலும் அறிவித்து வந்தேன். என்னை கைதுசெய்த பின்னர் இது குறித்த விசாரணைகள் நின்றிருக்க வாய்ப்பில்லை, ஆனால் என்னவானது என்பது குறித்து எனக்கு ஒன்றும் தெரியாது. கடந்த ஏழு மாதங்களாக எனக்கும் இந்த விசாரணைக்கும் தொடர்புகள் இருக்கவில்லை என பயங்கரவாத விசாரணை பிரிவிற்கு பொறுப்பாக இருந்த முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக்க டி சில்வா பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் வாக்குமூலமளித்தார்.
ஏப்ரல் 21 ஆம் திகதி பயங்கரவாத தாக்குதல் குறித்து ஆராய்ந்து பாராளுமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் இரண்டாம் விசாரணை பாராளுமன்ற குழுவரை 3 இல் இடம்பெற்றது.
இவ் விசாரணைக்காக பயங்கரவாத விசாரணை பிரிவிற்கு பொறுப்பாக இருந்த முன்னாள் பொலிஸ்மா அதிபர் நாலக்க டி சில்வா வரவழைக்கப்பட்டிருந்தார். சக்கர நாற்காலியில் அவர் வாக்குமூலமளிக்க வந்திருந்தார். அவருடனான விசாரணையில் பல்வேறு விடயங்கள் ஊடகங்கள் முன்னிலையில் தன்னால் தெரிவிக்க முடியாது என அவர் ஆரம்பத்தில் தெரிவித்ததை அடுத்து குறித்த சில கேள்விகளுக்கு அவர் ஊடகங்கள் முன்னிலையில் வாக்குமூலம் வழங்கினார் .
நாலக்க டி சில்வா :- "முதலில் ஒரு விடயத்தை நான் விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் தெரிவிக்க வேண்டும். ஒரு குற்றச்சாட்டின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ள நான் தற்போது பிணையில் வெளியில் உள்ளேன். ஆகவே எனது வழக்குகளுக்கு பாதகத்தை ஏற்படுத்தும் விதத்திலோ அல்லது பிணை கோரிக்கைகளுக்கு பாதகத்தை ஏற்படுத்தும் வகையில் எந்த சாட்சியையும் நான் வழங்க முடியாது என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன். அதற்கு ஆணைக்குழு அனுமதி வழங்க வேண்டும்"
ஆணைக்குழு :- உங்களுக்கு எதிராக வழக்கொன்று இருக்கும் என்றால் அதில் உங்களுக்கு எந்த சிக்கல்களும் ஏற்படாத வகையில் சாட்சியங்களை முன்வைக்க முடியும். ஆகவே நீங்கள் உங்களுக்கு பாதகமான விடயமோ அல்லது தேசிய பாதுகாப்புக்கு பாதகமான விடயங்களையோ ஊடகங்கள் முன்னிலையில் வெளிப்படுத்தாது இருக்கலாம்.
கேள்வி:- உங்களின் பொலிஸ் வாழ்க்கை பற்றி கூறுங்கள்?
பதில் :- 2012 ஆம் ஆண்டிலிருந்து பயங்கரவாத தடுப்பு பிரிவில் பணியாற்றி வருகின்றேன். அதன் பின்னர் 2015 ஆம் ஆண்டில் என்னை அரச புலனாய்வு பிரிவின் பிரதி பணிப்பாளராகவும் அதன் பின்னர் பிரதி பொலிஸ்மா அதிபராகவும் நியமித்தனர். அதில் இருந்து நான் பயங்கரவாத தடுப்பு குறித்து சேவையாற்றி வருகின்றேன்.
கேள்வி:- ஏப்ரல் 21 ஆம் திகதி பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடையதாக அமைப்பொன்றின் பெயர் கூற்படுகின்றது. அது என்னவென்று தெரியுமா?
பதில்:- ஆம், தேசிய தவ்ஹித் ஜமா-அத். என்.டி.ஜே. ஆரம்பத்தில் ஸ்ரீலங்கா தவ்ஹித் ஜமா-அத் என்றே அவர்கள் ஆரம்பித்தனர். பின்னர் அவர்களில் பிளவுகள் ஏற்பட்டு பல அமைப்புகளாக சிதைந்து இறுதியாக என்.டி.ஜே என்ற அமைப்பினை உருவாக்கியுள்ளனர்.
கேள்வி:- என்.டி.ஜே அவ்வமைப்பின் செயற்பாடுகள் பற்றி கூறுங்கள்?
பதில் :- எனது ஞாபகத்தில் உள்ளதற்கு அமைய நான் கூறுகின்றேன், 2013 தொடக்கம் 2014 ஆம் ஆண்டு காலப்பகுதிகளிலேயே பயங்கரவாத தடுப்பு பிரிவில் பணியாற்றிய நேரத்தில் தௌஹீத் ஜமாஅத் அமைப்பு பற்றி தகவல் கிடைத்தது. முதலில் இந்தியாவில் தான் இந்த அமைப்பு பிறந்தது எனலாம். தமிழ்நாடு தவ்ஹித் ஜமா-அத் என்று உருவாக்கப்பட்டது. அதுவே இலங்கையிலும் ஸ்ரீலங்கா தவ்ஹித் ஜமா-அத் என்று உருவாக்கப்பட்டிருந்தது. சஹாரான் குறித்தும் அப்போது தகவல் கிடைத்தது. அபோது அவர்கள் அடிப்படைவாத அமைப்பாக இருந்தார்களே தவிர இறுக்கமான அடிப்படைவாத அமைப்பாக இயங்கவில்லை.
கேள்வி:- இறுக்கமான வன்முறை அடிப்படைவாத அமைப்பாக எப்போது உருவெடுத்தது?
பதில்:- இவர்களின் வன்முறை அடிப்படைவாதம் என்பது பயங்கரவாத குண்டுத் தாக்குதல் நடத்திய பின்னர் தானே அவ்வாறு அடையாளப்படுத்தப்பட்டது. அதற்கு முன்னர் சிறு சிறு சம்பவங்கள் இருந்தது. அதுவும் அவர்களின் குழுக்கள் இடையில் தான் காணப்பட்டது. அவர்கள் வன்முறையாளர்கள் என்பது 21 ஆம் திகதி தாகுதலின் பின்னர் தானே அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
அடிப்படைவாதம் அதுவே வன்முறை இறுதியாக பயங்கரவாதம் என்ற நிலைக்கு செல்லும் என்பதால் அவற்றை கட்டுப்படுத்த வேண்டும். அதுதான் எமது பிரதான செயற்பாடாக இருக்க வேண்டும். எமது கடமையும் அதுவேயாகும். நாம் அதனைத்தான் செய்தோம். ஆரம்பத்தில் வன்முறை மற்றும் இனவாத செயற்பாடுகளை தடுப்பதற்கான செயற்பாடுகளையே நாம் முன்னெடுத்துவந்தோம் சமகாலத்தில் இன்டர்போல் உதவியையும் கோரியிருந்தோம், நான் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயங்கரவாத செயற்பாடுகள் குறித்து பயிற்சிகளை பெற்றுகொண்டுள்ளதால் இந்த விசாரணைகளை பயங்கரவாத தடுப்பு பிரிவின் கீழ் முன்னெடுப்பதே பொருத்தமானது என்றும் அறிந்திருந்தேன். நான் பதவியில் இருந்த காலத்தில் இந்த செயற்பாடுகளை முன்னெடுத்து சென்றேன். என்னால் முடிந்த அளவு ஆழமாக இவற்றை ஆராய்ந்து செயற்பட்டேன். எனக்கு அதற்கான அனுமதியும் உயர் மட்டத்தில் கிடைத்தது. முதலில் இருந்த பயங்கரவாதம் அல்ல இன்று இருப்பது, இது சர்வதேச பயங்கரவாத நகர்வுகள். அதற்கான நகர்வுகளுக்கு எம்மை நாம் மாற்றிக்கொள்ள வேண்டும். அதனையே நன் செய்தேன்.
கேள்வி:- சஹ்ரான தொடர்பாக முன்னெடுத்த விசாரணைகள் என்னவானது?
பதில் - ஆரம்பத்தில் புலிகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய உளவு அமைப்புக்கள் பற்றிய தேடுதல்களையே முன்னெடுத்து வந்தோம். இவை அனைத்துமே பொலிஸ்மா அதிபரின் கட்டளைக்கு அமையவே செய்தோம். சஹாரான் குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட போது அவர் குறித்த தகவல்களை பெற்றுக்கொள்ள அவருடை முகநூல் மற்றும் இணைய பக்கங்களை நாளாந்தம் ஆராய்ந்து வந்தோம். அதற்கமையவே அவர் வன்முறை அடிப்படைவாத பக்கம் செல்கின்றார் என்பதை அறிந்துகொள்ள முடிந்தது. காத்தான்குடி சம்பவத்தையும் வைத்துக்கொண்டு நாம் அவரை தேட ஆரம்பித்தோம்.
கேள்வி:- காத்தான்குடி சம்பவம் என்ன?
பதில் - 2017 ஆம் ஆண்டில் சஹரானுக்கும் மற்றுமொரு குழுவுக்கும் இடையில் மோதல் ஒன்று உருவாகியது. இந்த மோதல் குறித்து பொலிசார் நடவடிக்கை எடுத்தனர், ஆனால் பல்வேறு தரப்பினர் முறைப்பாடுகளை செய்திருந்தனர். அந்த முறைப்பாடுகள் குறித்து ஆராய எனக்கு பொலிஸ்மா அதிபர் கூறியிருந்தார். அது தொடர்பில் காத்தான்குடி பொலிஸ் நிலையம் விசாரணைகளை முன்னெடுத்ததோடு மேலதிக விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொலிஸ்மா அதிபரால் எனக்கும் பணிப்பு விடுக்கப்பட்டது. இது குறித்த தகவல்களை நான் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தேன். எப்போது என்று எனக்கு நினைவில் இல்லை. ஆனால் சகல அறிக்கையும் நான் நீதிமன்றத்தில் ஒப்படைத்திருந்தேன்.
கேள்வி:- உங்களுக்கு கிடைத்த தரவுகளை காத்தான்குடி பொலிசார் ஊடாகவ அனுப்புவீர்கள்?
பதில் - இல்லை, நானே நேரடியாகவே அறிக்கையை வழங்கினேன். அதன் பின்னர் சஹ்ரானை பிடிக்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. அதனைக்கொண்டு நாம் தேடினோம். ஆனால் நாம் தேடிய இடங்களில் அவர் இருக்கவில்லை. ஆகவே அவர் நாட்டை விட்டு தப்பித்திருக்க வேண்டும் என நாம் அனுமானித்தோம். ஆகவே திறந்த பிடியாணை ஒன்றினை பிறப்பித்து அவரை தேடும் நடவடிக்கைகளை கையாண்டோம். இன்டெர்போல் போன்ற நகர்வுகளுக்கு செல்ல வேண்டும் என்றால் முதலில் திறந்த பிடியாணை அவசியம். ஆகவே அதனை செய்தோம்.
கேள்வி:- சஹ்ரான் என்ற நபரின் பயணம் அவ்வளவாக நல்லதல்ல என்பதை நீங்கள் அறிந்துகொண்டீர்கள்?
பதில்:- ஆம், அவரது முகப்புத்தகம், இணைய பக்கங்களை கண்காணித்ததில் அவரது நகர்வுகள் நல்லதல்ல என்பதை நான் அறிந்துகொண்டேன். இது குறித்து வாராந்தம் பொலிஸ்மா அதிபருக்கு அறிக்கை வழங்குவேன். என்னை தொடர்ந்து கையாள அவரும் பணித்தார். நாம் அதன் மூலமாக தொடர்ச்சியாக கண்காணித்து வந்தோம். நான் நேரடியாக பொலிஸ்மா அதிபருக்கு தெரிவித்தேன். எனது கடமையும் அதுவே. குறிப்பாக இந்த தகவல்கள் பொதுவாக பிரிக்கப்படும். எல்.ரி.ரி.ஈ, புலம்பெயர் அமைப்பு, அடிப்படைவாத இவ்வாறான அமைப்புகள் மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ் என தனித்தனியாக நாம் வாராந்த புலனாய்வு மீளாய்வுக் கூட்டங்களிலும் தனிப்பட்ட ரீதியிலும் அறிவித்து வந்தேன். ஒரு வாரத்தில் இடம்பெற்ற சம்பவங்களை நான் பொலிஸ்மா அதிபருக்கு அறிவிப்பேன்.
கேள்வி:- நீங்கள் கூறியதை போல் குறித்த நபரின் முகப்புத்தகத்தையும் இணையத்தையும் கண்காணித்ததாக கூறினீர்கள், இவற்றில் பல காணொளிகள், புகைப்படங்கள், 9/11 தாக்குதலை குறித்த செய்திகள் , அவரது பிரசங்கம் எல்லாம் பதியப்பட்டது, ஆனால் இவை அனைத்துமே தமிழில் தான் பதிவேற்றப்பட்டது. இவற்றை எவ்வாறு கண்காணிக்க முடிந்தது.
பதில்:- ஆம், நான் எப்போது பயங்கரவாத தடுப்பு பிரிவை கையாள ஆரம்பித்தேனோ அப்போதே எனக்கு தேவையான வகையில் தனி அமைப்புகளை உருவாக்கிக்கொண்டேன். அதில் தமிழ் மொழிபெயர்ப்பு அதிகாரிகளும் உள்ளனர்.
கேள்வி:- ஆம் அதை பற்றி தெரிந்துகொள்ளவே கேட்டோம், குறிப்பாக அவர்களின் பிரசங்கங்களில் பெளத்த அடிப்படைவாதம் குறித்து அதிகம் பேசியுள்ளதுடன் முஸ்லிம் இளைஞர்களை அதற்கு எதிராக அணிதிரள அழைப்பு விடுத்துள்ளனர். அதுவே கேட்டேன் எவ்வாறு மொழிபெயர்ப்பு உதவிகள் கிடைத்தது என்பது அறிந்துகொள்ள.
பதில்:- ஆம், அவற்றை நாம் கையாள எமக்கு அதிகாரிகள் இருந்தனர். நான் முன்வைத்த பி அறிக்கையில் முழுமையாக அனைத்தையும் கூறியுள்ளேன்.
கேள்வி:- நீதிமன்றத்தால் விடுக்கப்பட்ட திறந்த பிடியாணையை அடுத்து அவர் தேடியும் கிடைக்கவில்லையா ?
பதில் - ஆம், காத்தான்குடி, குளியாப்பிட்டிய, குருநாகல் உள்ளிட்ட பல பகுதிகளில் வசித்து வந்திருந்தார். ஆகவே அங்கெல்லாம் தேடியும் அவர் கிடைக்கவில்லை. ஆகவே திறந்த பிடியாணை விடுத்து இன்டர்போல் உதவியை பெற்றுக்கொள்ள நாம் தீர்மானம் எடுத்தோம். அவர் வெளிநாட்டுக்கு தப்பியிருக்கலாம் என நாம் சந்தேகப்பட்டோம், ஆனால் அவரது கடவுச்சீட்டை அவதானித்ததில் அவர் வெளிநாடு போனதாக தெரியவில்லை. ஆனால் இந்தியாவில் இருப்பதாக ஒரு தகவல் கிடைத்தது ஆனால் அதனையும் உறுதிப்படுத்த முடியவில்லை. எனினும் நாம் திறந்த பிடியாணையை பிறப்பித்து blue notice விடுத்திருந்தோம். சிவப்பு எச்சரிக்கை விட முன்னர் நீல எச்சரிக்கை விட வேண்டும். பத்து எச்சரிக்கைகள் உள்ளது. சிவப்பு எச்சரிக்கை தான் இறுதியானது. நீல எச்சரிக்கை என்பது ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் மாத்திரம் தேடுவதாக அமையும்.
கேள்வி:- சஹ்ரான் என்பவர் குறித்து மாத்திரம்தான் தகவல்களை திரட்டினீர்களா?
பதில் - இல்லை, என்.டி.ஜே வை ஆராய்ந்த போது பலர் இருந்தனர். அவர்களின் பெயர்கள் எனக்கு நினைவில் இல்லை. ஆனால் ராசிக் என்பவர் பற்றியும் தகவல்களை திரட்டிக்கொண்டிருந்தோம். எனினும் சஹ்ரான் வேறு திசையில் பயணிக்கிறார் என்பதை அறிந்தே அவரின் முகநூல் பதிவுகளை மேற்பார்வை செய்ய ஆரம்பித்தோம். அவர் குறித்து மட்டும் அதிகமான கண்காணிப்பு இருந்தது. ஆனால் பலபேர் இருந்தனர்.
கேள்வி:- இவரை தவிர வேறு யார் பற்றிய தகவல்களை திரட்டினீர்கள்?
பதில் - பலர் பற்றிய தகவல்கள் உள்ளன. என்னை கைது செய்த பின்னர் எனது பதவியில் அமர்த்தப்பட்ட ஜகத் நிஷாந்தவை தெரிவுக்குழுவுக்கு அழைத்து விசாரணைகளை முன்னெடுத்தால் முழுமையான தகவல்களை அறிய முடியும். அவரிடம் நான் முழுமையாக விசாரணை அறிக்கையை கொடுத்தேன். அதன் பின்னர் எனக்கு இதை பற்றி ஒன்றும் தெரியாது. நான் ஏழு மாதங்களாக சிறையில் இருந்தேன்.
கேள்வி:- சஹ்ரானின் முகநூல் எந்த காலப்பகுதியில் மேற்பார்வை செய்யப்பட்டது?
பதில் - 2016 ஆம் ஆண்டு இறுதியிலிருந்து 24 மணித்தியாலங்களும் அவரின் முகநூல் பதிவுகள் கண்காணிக்கப்பட்டது. அப்போது தெரிந்தது அவர் வேறு ஒரு திசையில் பயணிக்கின்றார் என்பது.
கேள்வி:- இந்த முகநூல் பக்கத்தை தடைச் செய்ய நடவடிக்கை எடுத்தீர்களா?
பதில் - திறந்த பிடியாணை பெற்றுக்கொண்ட பின்னர், நீல எச்சரிக்கை , பொலிஸ் வர்த்தமானியில் தேடப்படும் நபர் என அறிவிக்கப்பட்ட பின்னர் இது குறித்து தொலைத்தொடர்பு விசாரணை ஆணைக்குழுவிற்கு தெரியப்படுத்த வேண்டும். முகப்புத்தக நிறுவனத்திற்கும் அறிவிக்க வேண்டும். இந்த அனைத்து செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டது. என்னை கைதுசெய்யும் வரையில் இது அனைத்தும் சரியாக செயற்பட்டது.
கேள்வி:- உங்களை எப்போது கைது செய்தனர்?
பதில்:- 2018 அக்டோபர் 25 ஆம் திகதி.
கேள்வு:- இன்டர்போல் நிறுவனத்திடம் விடுத்த கோரிக்கைக்கு பதில் கிடைத்ததா?
பதில் :- எனக்கு அது நினைவில் இல்லை
கேள்வி:- தேடப்படும் நபர் சர்வதேச நாடுகளில் இருக்கின்றார் என்பதும் சரியாக கண்டறியப்படவில்லையா?
பதில் - இல்லை, அவர் இந்தியாவில் இருப்பதாக தகவல் கிடைத்தது அதனை முழுமையாக நம்பிவிடவில்லை. சட்ட ரீதியாக எந்த ஆதராமும் இருக்கவில்லை. எனினும் தொலைபேசி அழைப்புகள் கண்காணிக்கப்பட்டது. அவருக்கு தெரியாதே அவை கண்காணிக்க திட்டம் வகுக்கப்பட்டது. திறந்த பிடியாணை ஒன்று இருப்பதை காட்டாது அவரை தேடினோம்.
கேள்வி:- காத்தான்குடி பொலிஸ் நிலையத்திலும் அவரை கைது செய்வதற்கான அறிவித்தல்கள் விடுக்கப்பட்டுள்ளது தானே?
பதில் - அந்த காலப்பகுதியில் தான் அவர் தலைமறைவாகியிருந்தார். அதனால் தொழில்நுட்ப உதவியுடனும் அவரை தேடும் முயற்சிகளில் ஈடுபட்டோம். அது அவருக்கு தெரியாது கையாளப்பட்டது.
கேள்வி:- நீங்கள் கைதாகும் முன்னர் இந்த விசாரணைகளை நிறுத்துமாறு அழுத்தம் கிடைத்ததா?
பதில் - இல்லை அவ்வாறான அழுத்தங்கள் வரவில்லை குறிப்பாக பொலிஸ்மா அதிபரிடத்திலிருந்து வரவில்லை. அரசியல் அழுத்தங்கள் எதுவும் வரவில்லை. அவ்வாறு எனக்கு ஒன்றும் தெரியாது. அவரை கைது செய்ய எமது தனி குழுவொன்று இயங்கியது. எமக்கு அவரை கைதுசெய்ய வேண்டும் என்ற நோக்கம் இருந்தது. அவர் குறித்த நேரடியான ஆதாரங்கள் கிடைக்காத காரணத்தினால் அவரை கைதுசெய்து நேரடியாக விசாரிக்க வேண்டும் என்ற நோக்கமே எமக்கு இருந்தது. அதற்கு எந்த தடையும் இருக்கவில்லை.
கேள்வி:- ஆனால் அப்போதைய காலத்தில் மேற்படி விசாரணைகளை நிறுத்துமாறு பொலிஸ்மா அதிபரால் உங்களுக்கு கடிதம் அனுப்பட்டுள்ளதே?
பதில் - எனக்கு நினைவில் உள்ள காரணிகளுக்கு அமைய பொலிஸ்மா அதிபரிடம் இருந்து அவ்வாறான கடிதம் எதுவும் வரவில்லை. அவ்வாறு நிறுத்த கூறவும் முடியாதே.
கேள்வி:- எனினும் பொலிஸ்மா அதிபர் 2018 ஏப்ரல் மாதம் கடிதமொன்றை அனுப்பியுள்ளார். (குறித்த கடிதம் நாலக டி சில்லாவின் பார்வைக்கும் கொடுக்கப்பட்டது) செயலாளருக்கு அனுப்பிய கடிதத்தில் ஒரு பிரதியை உங்களுக்கும் அனுப்பியுள்ளார். புலனாய்வு செயற்பாடுகளுக்கு தடை என்பதால் இவற்றை நிறுத்த வலியுறுத்தியுள்ளார்.
பதில்:- அப்படியா, ( ஆவணத்தை முழுமையாக வாசித்த அவர்) இல்லை இது அதற்கான ஆவணம் அல்ல, இதில் கூறப்படும் நபர் அவரல்ல. இந்த நபர் அல் கைதா இயக்கத்துடன் தொடர்பில் உள்ளார் என்றும் அல் கைதா அமைப்பின் பயிற்சிகளை பெற்றார் என்றும் கூறப்பட்டது. எனது நினைவில் இருக்கும் தகவல்களுக்கு அமைய இவர் விமானநிலையத்திற்கு வருவதற்கு இருந்தார். ஆகவே நாம் இவருக்கு விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுத்தோம். அப்போதுதான் இந்த கடிதம் எமக்கு அனுப்பப்பட்டது. அவரை கொண்டுவர வேண்டாம் அவர் உளவுத்துறை செயற்பாடுகளில் ஈடுபடுகின்றார் என்று கூறப்பட்டது. இவர் சஹ்ரான் அல்ல. இது குறித்த சில விடயங்களை தனிப்பட்ட முறையில் என்னால் கூற முடியும்.
கேள்வி:- இவர்களின் பின்னணியில் அரசியல் தொடர்புகள் காணப்பட்டதா? இவ்வாறான நபர்களுக்கு அரசியல்வாதிகளின் கட்டளைகள் இருந்ததா?
பதில் - ம்ம்ம், அவ்வாறு இருக்கவில்லை. அரசியல் தொடர்புகள் இருந்ததாக எமக்கு தெரியவில்லை. அதேபோல் அவர்கள் குறித்து ஆராய எமக்கு முக்கியத்துவம் இருக்கவில்லை. சந்தேக நபரை பிடிப்பதிலேயே முழு அவதானம் செலுத்தப்பட்டது. அதுகுறித்து மட்டுமே செயற்பட்டோம்.
கேள்வி:- சஹ்ரானுக்கு வெளிநாட்டிலிருந்து பணம் கிடைத்திருந்தாக அறிந்தீரா?
பதில்:- அவ்வாறு இருந்ததும் ஆனால் அவரின் வங்கித் கணக்கு தரவுகளுக்கு அமைய அவ்வாறு சந்தேகிப்பதற்கான சாத்தியங்கள் இருக்கவில்லை. அதனாலேயே அவரை எமது விசாரணைக்கு நேரடியாக கொண்டுவர வேண்டும். அப்போதுதான் உண்மைகளை கண்டறிய முடியும் என நினைத்தோம். குறிப்பாக பண மோசடிகளுடன் பயங்கரவாத தொடர்புகள் இருக்கின்றதா என்பது குறித்தும் ஆராய வேண்டும். விசாரணைகளில் பொதுவாக இதனை செய்வோம்.
கேள்வி:- சஹ்ரான் போன்று இன்னொருவர் “ஆர்மி மொய்தீன்” என்பவர் பற்றி அறிந்திருந்தீர்களா? காத்தான்குடி பிரதேசத்தை செய்தன்வர்தான் இவரும்.
பதில் - அவ்வாறு ஒருவர் குறித்து நினைவில் இல்லை. இந்தப் பெயரை கேள்விப்பட்டுள்ளேன். ஆனால் நினைவில் இல்லை.
கேள்வி:- நீங்கள் எப்போதாவது பாதுகாப்பு சபையில் கலந்துகொண்டுள்ளீர்களா?
பதில் - இல்லை, பாதுகாப்பு கூட்டங்களில் நான் கலந்துகொள்ளவில்லை. செவ்வாய்க்கிழமை கூடும் புலனாய்வு மீளாய்வு கூட்டங்களில் தான் கலந்துகொள்வேன். பாதுகாப்பு கூட்டங்களுக்கு எனது மேல் அதிகாரிகளே செல்வார்கள்.
கேள்வி:- புலனாய்வு கூட்டங்களில் சஹ்ரான் பற்றி அறிவித்தீர்களா?
பதில் - பயங்கரவாத விசாரணை பிரிவின் பணிப்பாளர் ஊடாக இதுகுறித்த தகவல்களை அறிவித்திருந்தேன். எப்படியும் நாம் இதனை அறிவிக்க வேண்டும். நான் கலந்துகொண்ட நேரங்களில் சஹாரான் குறித்து அறிவித்திருந்தேன். இவரி கண்காணிக்கப்படுகின்றார் என்று அறிவித்திருந்தோம்.
கேள்வி:- பொலிஸ்மா அதிபருக்கு அறிவித்திருந்தீர்களா?
பதில் - ஆம் ஒவ்வொரு திங்கட்கிழமையும் என்னிடத்தில் நடைமுறைச் செயற்பாடுகள் பற்றிய அறிக்கை கோருவார் அப்போது இது குறித்த தரவுகளையும் சமர்பித்துள்ளேன்.
கேள்வி:- மொஹமட் மில்ஹான் என்பவரின் முகநூல் விவரங்களை ஆராய்ந்தீர்களா?
பதில் - எனக்கு நினைவில் இல்லை. 7 மாதங்களாக இந்த செயற்பாடுகள் குறித்து ஆராயமல் இருந்தால் பெயர்கள் நினைவில் இல்லை. சஹ்ரன் குறித்து தெரியும்.
கேள்வி:- சஹ்ரன் போன்று வேறு நபர்கள் ஐ. எஸ்உடன் தொடர்புடைய இருந்ததாக அறிந்திருந்தீர்களா?
பதில்:- பலர் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டது. குறிப்பாக முதலில் ஐ. எஸ்இல் இருந்த இலங்கையர் ஒருவர் அவரது பெயர் நினைவில் இல்லை. அங்கு இறந்தவர், அவரது குடும்பம் பின்னர் இலங்கைக்கு வந்ததே. அவர்கள் குறித்து ஆராய்ந்து கண்காணித்து வந்தோம்.
கேள்வி:- இந்த செயற்பாடுகளில் உங்களுக்கும் ஏனைய புலனான்வு பிரிவுகளுக்கும் இடையில் முரண்பாடுகள் இருந்ததா?
பதில்:- அவ்வாறு இருக்கவில்லை, எனது பக்கத்தில் அவ்வாறு ஒன்றும் இருக்கவில்லை, அவர்களின் பக்கம் இருந்ததா என்பது எனக்கு தெரியாது.
கேள்வி:- நீங்கள் கைதாகிய பின்னர் பயங்கரவாத விசாரணை பிரிவு சஹ்ரான் குறித்த விசாரணைகளை சரியாக முன்னெடுத்ததா?
பதில் - விசாரணைகள் நின்றிருக்க வாய்ப்பில்லை. எனது வழிநடத்தல் இல்லாமல் போனது குறைபாடாவே இருந்திருக்கும். எனக்கு கீழ் பணியாற்றிய அதிகாரிகள் புலிகள் பற்றியே தேடுதல்களை முன்னெடுத்து வந்தனர். இவ்வாறான சர்வதேச இஸ்லாமிய பயங்கரவாதம் பற்றி அறிந்திருக்கவில்லை. நானே இவர்களை வழிநடத்தி சர்வதேச பயங்கரவாத கண்காணிப்பின் பக்கம் கொண்டுவந்தேன். அவர்களை நான் வெளிநாடுகளுக்கு அனுப்பியும் அறிவுருத்தல்களை வழங்கியும் பயிற்றுவித்துள்ளேன். சர்வதேச புலனாய்வு தரப்புடன் தொடர்புகளை கொண்டு எமது அதிகாரிகளை திறமையான நபர்களாக மாற்ற நடவடிக்கை எடுத்தேன். இதற்கு தலைமைதாங்கியது நான். இவ்வாறு செய்யும் முதல் சந்தர்ப்பம் இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.
கேள்வி:- இந்த விடயத்தை கையாள உங்களிடம் தனிப்பட்ட உபாய மார்க்கங்கள் இருந்திருக்க வேண்டுமே?
பதில் - ஆம், என்னிடம் தனிப்பட்ட உபாயமார்க்கம் ஒன்று இருந்தது. சஹ்ரான் என்பவர் எதிர்காலத்தில் பெரும் பிரச்சினைக்குரியவராக உருவெடுப்பார் என்று எனக்கு தெரிந்தது. இது குறித்து எனது அதிகாரிகளை அறிவுருத்தியிருந்தேன். இவரது செயற்பாடுகளை கண்காணிக்கையில் இவர் முஸ்லிம் இளைஞர்களை வேறு ஒரு மோசமான திசைக்கு திருப்புகின்றார் என்று தெரிந்தது. என்.டி.ஜே என்ற அமைப்பை தடைசெய்ய வேண்டும் என 2018 இல் நான் தெரிவித்தேன்.
கேள்வி:- யாருக்கு தெரிவித்தீர்கள்?
பதில்:- யாருக்கு என்று சரியாக ..... இப்போதுள்ள அதிகாரியை கேளுங்கள் அதில் எனது அறிக்கையில் அவை இருக்கும். எனக்கு நினைவில் இல்லை.
கேள்வி:- சஹ்ரான் என்பவருக்கு இந்த இஸ்லாமிய அமைப்புகள் என கூறும் அமைப்புகளின் உதவிகள் கிடைத்துள்ளதா ?
பதில் - ஆம், சஹ்ரானின் வீடியோக்களை பார்க்கும் போது அது ஐ. எஸ். ஐ. எஸ் பக்கமே செல்கின்றது. ஆகவே நிச்சயமாக இவருக்கும் ஐ. எஸ். ஐ. எஸ் அமைப்பிற்கும் தொடர்புகள் இருப்பது தெரிந்தது. ஐ. எஸ். ஐ. எஸ் அமைப்பின் செயற்பாடுகளை நியாயப்படுத்தி இவர் காணொளிகளை பதிவேற்றுவார். அதேபோல் ஐ. எஸ். ஐ. எஸ் இணையதளங்களில் உள்ள விடயங்களை அவரது முகப்புத்தக கணக்கு, இணைய பக்கத்தில் பதிவேற்றுவார். அப்படி பார்கையில் இவர் அந்தபக்கம் போய்விட்டார் என்பது உருதியாகின்றதே. இவை அனைத்தையும் வைத்து பார்த்தே ஒரு நிலைப்பாட்டுக்கு வந்தோம்.
கேள்வி :- இவ்வாறு சர்வதேச அமைப்புகளுடன் நேரடி தொடர்பை பேணியதை அறிய முடிந்ததா?
பதில் - இல்லை அவ்வாறான நேரடி ஆதாரங்களை பெற்றுக்கொள்ள முடியவில்லை.
கேள்வி:- சஹ்ரானின் முகநூல் பக்கத்தில் அவரது பதிவுகளில் சர்வதேச நாடுகளின் நபர்களின் லைக், ஷேர் இருக்கும் தானே. அவற்றை வைத்து அவரது சர்வதேச தொடர்புகள் எவ்வராஉ என்பது கண்டறிய முடியவில்லையா?
பதில் - ஆம், ஆம்.. அவ்வாறு இருந்தது, லைக் இவ்வளவு ஷேர் . லைக் உள்ளது என்று தனியாக அறிகையிடுவோம். எப்பிடியும் இவர்களில் அனைவருமே உண்மையான பெயரில் இருப்பதிலையே. அவற்றை கண்டறிய சற்று கடினமான விடயம் தான். ஆனால் அவ்வாறு அறிந்துகொண்டதன் பின்னர் அவரின் நண்பர்கள் தொடர்பிலும் தகவல் தேடினோம்.
கேள்வி:- சஹ்ரானின் உண்மையான பேரில் இல்லாது பேரு பொய்யான பெயர்களின் முகநூல், இணைய கணக்குகள் இருந்ததா?
பதில்:- எனது நினைவின் படி, சஹ்ரானிடம் இரண்டு முகநூல் கணக்குகள் இருந்தது. இணைய தளப்பதிவும் ஒன்றோ இரண்டோ இருந்தது என நினைகின்றேன்.
கேள்வி:- நாட்டின் பாதுகாப்பு விடயத்தில் சமூக வலைப்பதிவு தளங்கள் பாதிப்பா? அல்லது இருக்கவேண்டுமா?
பதில்;- சமூக வலைப்பதிவு தளங்கள் இருக்க வேண்டும். ஆனால் குழப்பும் செயற்பாடுகள் இருந்தால் அவற்றை கண்காணிக்க ஒரு வேலைத்திட்டம் அவசியம். முகப்புத்தக கலக்குகளில் அவ்வாறு உள்ளது. பயங்கரவாத அல்லது அடிப்படைவாத செயட்படுகளில் ஈடுபடும் கணக்குகள் இருந்தால் அந்தக் கணக்குல முடக்கப்படும் என உள்ளது. ஏனையவற்றிலும் அவற்றை கையாள வேண்டும். குறிப்பால நாம் முறைப்பாடுகளை இவர்களுக்கு அனுப்பினால் அவர்கள் அதனை பர்கின்றர்களா என்பது கேள்வியே. ஆகவே இதற்கு மாற்று நடவடிக்கை ஒன்றினை நாம் கையாள வேண்டும். அவையும் உள்ளது.
0 comments:
Post a Comment