பா.ஜ.வுக்கு எதிராக பலமான எதிர்க்கட்சியாக காங்கிரஸ் செயல்படும் என்று, வயநாட்டில் நடந்த வாக்காளர் நன்றி அறிவிப்பு கூட்டத்தில் ராகுல்காந்தி பேசினார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, தான் வெற்றிபெற்ற வயநாடு தொகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க நேற்று முன்தினம் ேகரளா வந்தார். தொடர்ந்து அவர் காளிகாவு, எடவன்னா என வயநாடு தொகுதிக்கு உள்பட பகுதிகளில் வாகன பேரணி நடத்தி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
நேற்று 2வது நாளாக அவர் கல்பெட்டாவில் உள்ள வயநாடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்பி அலுவலகத்தில் 10 மணியளவில் பொதுமக்களிடம் இருந்து புகார் மனுக்களை பெற்று கொண்டார். ஏற்கனவே கலெக்டர் அலுவலகத்தில் ஆதிவாசி சமூகத்தை சேர்ந்த சிலர் இலவச நிலம் கேட்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்களும் ராகுல் காந்தியை சந்தித்து பேசினர். பின்னர் ராகுல்காந்தி அங்கிருந்து கல்பெட்டா பஸ் நிலையம் வரை வாகன பேரணி நடத்தினார்.
கம்பளக்காடு பகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: வயநாடு தொகுதி மட்டுமல்லாமல் கேரளாவின் பிரதிநிதியாக நான் நாடாளுமன்றத்திற்கு உள்ேளயும், வெளியேயும் செயல்படுவேன்.
என்னை வெற்றி பெற வைத்த வாக்காளர்களுக்கு நான் என்றும் நன்றி கடன்பட்டுள்ளேன். பாஜவுக்கு எதிராக காங்கிரஸ் வலுவான எதிர்க்கட்சியாக செயல்படும்.
அதிகாரம் மற்றும் பண பலத்தை பயன்படுத்திதான் மோடி 2வது முறையாக ஆட்சிக்கு வந்துள்ளார்.மக்களிடையே வெறுப்பையும், பகை உணர்வையும் வளர்த்து, விஷத்தை பரப்பி வருகிறார். பாஜவுக்கு கிடைத்துள்ளது தற்காலிக வெற்றி மட்டுமே.
காங்கிரஸ் தனது பாரம்பரியத்தை பயன்படுத்தி பாஜவை எதிர்கொள்ளும்.இவ்வாறு அவர் பேசினார். அவர் இன்றும் வயநாடு தொகுதியில் பல்வேறு பகுதியில் வாகன பேரணி நடத்தி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார். பின்னர் மதியம் கோழிக்கோட்டில் இருந்து விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.
0 comments:
Post a Comment