இலங்கையில் இஸ்லாமியக்கொடி பறக்கவேண்டும் என்றும் முஸ்லிம்கள் அல்லாத அனைவரையும் கொல்லவேண்டும் என்றும் சஹ்ரான் வெளிப்படையாகவே தெரிவித்திருந்ததாக சூஃபி முஸ்லிம் பிரிவினைச் சேர்ந்த பிரதிநிதி மௌலவி கே.ஆர்.எம்.சஹ்லான் தெரிவித்தார்.
நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) சாட்சியம் வழங்கியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவித்த அவர், “முஸ்லிம்கள் அல்லாத அனைவரையும் கொல்லவேண்டும் என்ற கருத்துக்களை வெளிப்படையாக சஹ்ரான் மூன்று சந்தர்ப்பங்களில் கூறியிருந்தார். ஆனால் இது குறித்து எவருமே எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அகில இலங்கை ஜமியத்துல்லா உலமா சபை உள்ளிட்ட அனைவரும் இதற்கு பொறுப்புக்கூற வேண்டும்.
கிறிஸ்தவ மக்களுக்கு எதிராக அவர் 2016ஆம் ஆண்டு உரையாற்றியது மட்டுமல்ல, அவர்களுக்கு எதிராக பேசிய கருத்துக்களை மட்டக்களப்பு தேவாலயங்களிலும் கையளித்தார். இதில் கிறிஸ்மஸ் தினம் குறித்தே அதிகமாக விமர்சித்தார்.
பௌத்தர்களுக்கு எதிராக அவர் பேசியதாக நான் அறியவில்லை. ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் வெளிவந்த பழைய இறுவெட்டுக்களில் பௌத்த மதம் குறித்து பேசியதை நான் பார்த்தேன். அதுமட்டும் அல்ல 2016 இல் இலங்கைக்கு எதிராகவும் தேசியத்திற்கு எதிராகவும் அவர் உரை நிகழ்த்தினார்.
மூன்று தடவைகள் இவ்வாறு அவர் தேசிய எதிர்ப்பு கருத்துக்களை கூறினார். இதில் முஸ்லிம் அல்லாத அனைவரையும் கொல்லவேண்டும் என்று கூறியுள்ளார். பகிரங்க கூட்டத்தில் இவற்றை அவர் கூறினார்.
இஸ்லாமிய அடிப்படைவாதிகள் பிற்காலத்தில் பயங்கரவாதியாக மாறிய வரலாறுகள் அதிகம் உள்ளன. அவ்வாறுதான் சஹ்ரானும் மாறியிருக்க வேண்டும். இஸ்லாமிய ஆட்சிக்கு தேசப்பற்று எதிரானது என்று கூறினார்.
தாய்நாட்டை நேசிப்பவர் முஸ்லிம் அல்லர். இலங்கையின் தேசியக்கொடியை ஏந்தினால் இஸ்லாமிய ஆட்சிக்குப் பாதிப்பு, இலங்கையில் இஸ்லாமியக் கொடி பறக்கவேண்டும். இலங்கை நாட்டை முஸ்லிம்கள் கைப்பற்றவேண்டும் என அவர் கூறினார்.
அதன் பின்னர் அவரது முகப்புத்தகத்தில் பல வன்முறைக்கருத்துக்கள் உள்ளன. இது குறித்த தகவல்களை உள்ளடக்கி கடிதமாகத் தயாரித்து ஜனாதிபதி காரியாலயம், நீதி அமைச்சர் காரியாலயம் (விஜயதாச ராஜபக்ஷ) பிரதமர் காரியாலயம், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் காரியாலயம், அமைச்சர் சாகல ரத்னாயாகவின் காரியாலயம் ஆகியவற்றில் கையளித்ததுடன் பொலிஸ்மா அதிபரிடமும் முறைப்பாடு செய்தோம்.
பயங்கரவாத தடுப்பு பிரிவின் அதிகாரி நாலக டி சில்வாவிடமும் ஒரு பிரதியையும் வழங்கினோம். பின்னர் பிரதமர் அலுவலகத்திலிருந்து, இந்த விடயம் பிரதமர் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது என்ற கடிதம் வந்தது. சட்டமா அதிபர் திணைகளத்தில் இருந்தும் பல கடிதங்கள் வந்தன.
பின்னர் காத்தான்குடி அலியார் சந்தியில் ஒரு பிரசாரக் கூட்டத்தை சஹரான் நடத்தினார். தேசிய தௌஹித் ஜமாத் இந்தக் கூட்டத்தை நடத்தியது. சூஃபி முஸ்லிம்களை, முஸ்லிம்கள் அல்லர் என நாம் ஏன் கூறுகின்றோம் என்பதே இந்த கூட்டத்தின் நோக்கமாக இருந்தது.
இதன்போது அந்த இடத்தில் குழப்பம் ஏற்பட்டது. சூஃபி முஸ்லிம் ஒருவரை தௌஹித் ஜமாத் நபர் ஒருவர் வாளால் வெட்டினார். இன்னொருவரும் தாக்கப்பட்டார். இது குறித்து பொலிஸ் முறைப்பாடுகள் பதியப்பட்டன. இதில் ஒன்பது தௌஹித் அமைப்பினரும் சூஃபியைச் சேர்ந்த நால்வரும் கைதுசெய்யப்பட்டனர்.
இந்த சம்பவத்தின் பின்னர் சஹ்ரான் காத்தான்குடியில் இருக்கவில்லை. நாம் இந்தச் சம்பவம் குறித்து காத்தான்குடியில் முறைப்பாடு செய்தோம். அதன் பின்னர் சஹ்ரானை காணவில்லை” என மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment