அம்பாறை, கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு கோரி மதகுருமார்கள் கடந்த திங்கட்கிழமை முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்கள் ஆரம்பித்த போராட்டம் இன்று (சனிக்கிழமை) 6ஆவது நாளாகவும் தொடர்கிறது. இந்நிலையில் இந்த போராட்டத்திற்கு அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் தமது ஆதரவை வெளியிட்டு வருகின்றனர்.
அதற்கமைய பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரும் இன்று போராட்டக்களத்திற்குச் சென்று ஆதரவு தெரிவிக்கவுள்ளார். அவர் தற்போது போராட்டக்களத்திற்குச் சென்றுகொண்டிருப்பதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
அம்பாறை, கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறுக் கோரி கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர், கிழக்கிலங்கையின் இந்துகுருமார் ஒன்றியத்தலைவர் சிவஸ்ரீ.க.கு.சச்சிதானந்த சிவம் குருக்கள், கல்முனை மாநகரசபை உறுப்பினர்களான அழகக்கோன் விஜயரெட்ணம், சந்திரசேகரம் ராஜன் உள்ளிட்டோர் குறித்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
போராட்டம் இடம்பெறும் இடத்தில் அதிகளவான பொதுமக்கள் ஆதரவு தெரிவித்து குவிந்துள்ளதோடு, இதன்காரணமாக போராட்டக்களம் பரபரப்பு மிகுந்த பகுதியாக மாறி வருகிறது.
இதேவேளை பேச்சவார்த்தை நடத்துவதற்காக மதகுருமார்கள் நடத்தும் போராட்ட இடத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், அமைச்சர் மனோ கணேசன் மற்றும் தயா கமகே ஆகியோர் நேற்று சென்றிருந்தனர்.
கல்முனை வடக்கு பிரதேச செயலகம் குறித்து பிரதமர் விடுத்துள்ள செய்தி, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மதகுருமார்களுக்கு அறிவிக்கப்பட்டது. இதன்போது குறித்த பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதற்கு 3 மாதங்கள் அவகாசம் கோரப்பட்டுள்ளதாக அமைச்சர்களால் தெரிவிக்கப்பட்டது.
எனினும், குறித்த அறிவிப்பை போராட்டக்காரர்கள் ஏற்க மறுத்ததால் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததுடன் அங்கு குழப்பநிலையும் ஏற்பட்டிருந்தது.
மேலும் எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்குள் உரிய தீர்வு கிடைக்கப்பெறாதவிடத்து நஞ்சருந்தி உயிர்துறக்கத் தயாராகவுள்ளதாக உண்ணாவிரதத்தில் பங்குகொண்ட தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment