மட்டக்களப்பில் சுழல் காற்று 62 வீடுகள் சேதம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட சுழல் காற்றினால் பாதிப்படைந்த பகுதிகளுக்கு அதிகாரிகள் கள விஜயம் மேற்கொண்டுள்ளனர். அத்தோடு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மட்டக்களப்பின் சில பகுதிகளில் நேற்று முன்தினம்   மாலை பெய்த கடும் மழையின்போது ஏற்பட்ட சுழல் காற்றில் சிக்கி பல வீடுகள், கட்டிடங்கள், மரங்கள் என்பன சேதமடைந்துள்ளன.
வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள இலுப்படிச்சேனை, கொத்தியாபுலை, தாண்டியடி, காஞ்சிரங்குடா, புதுமண்டபத்தடி உள்ளிட்ட இன்னும் சில பகுதிகளில் வீசிய சூறைக்காற்றினால் அங்கிருந்த சுமார் 62 இற்கும் மேற்பட்ட வீடுகளே இவ்வாறு சேதமடைந்துள்ளன.
இந்நிலையில் குறித்த பகுதிகளுக்கு கள விஜயம் மேற்கொண்ட அதிகாரிகள், சேத விபரங்களை ஆராய்ந்ததோடு நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்ட செயலாளரின் பணிப்புரைக்கமைய மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் எம்.ஏ.சியாத், மாவட்ட அனர்த்த ஒருங்கிணைப்பாளர் ஆர்.சிவநாதன், மண்முனை மேற்கு பிரதேச செயலக அனர்த்த நிவாரண உத்தியோகத்தர் என்.சிவநிதி மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட குழுவினர் நேற்று இந்த விஜயத்தை மேற்கொண்டனர்.
இதன்போது சேதமடைந்த வீடுகளுக்கு முதற்கட்டமாக 10 ஆயிரம் ரூபாய் நிதி வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment