இலங்கையில் ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல்கள் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு இன்று (செவ்வாய்க்கிழமை) மீண்டும் கூடவுள்ளது.
இன்றைய தினம் பொலிஸ் உயரதிகாரிகள் நால்வர் முன்னிலையாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதற்கமைய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்ன, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகர, பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் வருண ஜயசுந்தர மற்றும் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் நாலக டி சில்வா ஆகியோர் முன்னிலையாகவுள்ளனர்.
ஏப்ரல் 21ஆம் திகதி இலங்கையின் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக ஆராய பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு நியமிக்கப்பட்டது.
இந்த குழுவில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம், அமைச்சர் ரவி கருணாநாயக்க, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பேராசிரியர் ஆசு மாரசிங்க, கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன, காவிந்த ஜயவர்தன மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர்.
இந்த தெரிவுக்குழுவின் முதல் அமர்வு கடந்த 29ஆம் திகதி இடம்பெற்றிருந்தது. இதன்போது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் ஷாந்த கோட்டேகொட மற்றும் தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைமை அதிகாரி சிசிர மென்டிஸ் ஆகியோர் சாட்சி வழங்கியிருந்தனர்.
அத்தோடு அன்றைய தினம் இடம்பெற்ற விசாரணைகள் ஊடகங்களுக்கு பகிரங்கப்படுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment