தமிழக சட்டசபையில் 22 இடங்கள் காலியாக இருந்தன.
அந்த இடங்களுக்கு சமீபத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. அதில் 13 இடங்களில் தி.மு.க.வும், 9 இடங்களில் அ.தி.மு.க.வும் வெற்றி பெற்றன.இதற்கிடையே சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர தி.மு.க. சார்பில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே சட்டசபை கூடியதும் சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் எடுத்துக்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தற்போது தி.மு.க. கொண்டு வந்துள்ள நம்பிக்கை இல்லா தீர்மானம் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் சட்டசபை கூட்டம் எப்போது கூட்டப்படும் என்ற எதிர்பார்ப்பு கடந்த சில தினங்களாக நிலவி வந்தது.தமிழக சட்டசபையில் 2019-2020-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கடந்த பிப்ரவரி மாதம் 8-ந்தேதி தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் மீதான விவாதம் பிப்ரவரி 14-ந் தேதி வரை நடைபெற்றது.அதன் பிறகு பாராளுமன்ற தேர்தல் வந்ததால் துறை வாரியாக நடத்தப்படும் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடத்தப்படவில்லை. எனவே மீண்டும் சட்டசபை கூடியதும் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் எடுத்துக் கொள்ளப்படும் என்று கூறப்பட்டிருந்தது.இந்த நிலையில் தமிழக சட்டசபை வருகிற 28-ந்தேதி காலை 10 மணிக்கு கூடும் என்று சட்டசபை செயலாளர் சீனிவாசன் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளார்.இதற்கு முன்னேற்பாடாக துறை வாரியாக கொள்கை விளக்க குறிப்புகள் தயாரிக்கும் பணி தொடங்கி உள்ளது.
இதற்காக அமைச்சர்கள் துறை ரீதியான ஆய்வுக் கூட்டத்தை நடத்தி வருகின்றனர்.உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் ஆகியோர் நேற்று துறை ரீதியாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள்.தமிழகம் முழுவதும் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு மிக அதிக அளவில் உள்ளது. எனவே இந்த பிரச்சினை சட்டசபையில் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சட்டசபை 28-ந்தேதி கூடியதும் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு ஒத்தி வைக்கப்படும். ஜூலை 1-ந்தேதி முதல் சட்டசபை நிகழ்ச்சிகள் தொடங்கும்.
இந்த கூட்டத்தொடர் சுமார் ஒரு மாதம் நடைபெறும். தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குடிநீர் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப தயாராகி வருகின்றன.
சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர தி.மு.க. கடிதம் கொடுத்துள்ளதால் சட்டசபை கூடியதும் முதல் நிகழ்வாக சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் எடுத்து கொள்ளப்படும்.
அதன்பிறகு மற்ற நிகழ்ச்சி நிரல் ஒவ்வொன்றாக பேரவையில் வைக்கப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அடுத்த வாரம் சட்டசபை தொடங்குவதற்கு முன்பு அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெறும்.அப்போது சட்டசபையில் எந்தெந்த தேதியில் என்னென்ன பிரச்சினைகளை எடுத்துக்கொள்ளலாம் என்பது பற்றி அதில் முடிவெடுக்கப்படுகிறது.
0 comments:
Post a Comment