ஆந்திராவில் முதல்வர் ஜெகன் மோகன் அமைச்சரவையில் 25 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். நடிகை ரோஜாவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை.
அவருக்கு சபாநாயகர் பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆந்திராவில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 151 தொகுதிகளில் வெற்றிபெற்றது. இதைத் தொடர்ந்து, ஆந்திர முதல்வராக கடந்த 30ம் தேதி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி மட்டும் பதவியேற்றார்.
அமைச்சர்கள் யாரும் அவருடன் பதவியேற்கவில்லை. இந்நிலையில், அவரது அமைச்சரவையில் பங்கேற்கும் 25 அமைச்சர்களின் பெயர் பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. அப்போது அவர்களுக்கான இலாகாக்களும் அறிவிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, நேற்று இவர்கள் பதவியேற்றனர். அவர்களுக்கு ஆளுநர் நரசிம்மன் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
இவர்களுடன் ஜாதி வாரியாக ஜெகன் நியமித்த ஐந்து துணை முதல்வர்களும் பதவியேற்றனர்.
25 அமைச்சர்களும், 5 துணை முதல்வர்களும் நேற்று பகல் 11.30 மணியளவில் அமராவதியில் உள்ள தலைமை செயலகத்திற்கு சென்று பொறுப்பேற்று கொண்டனர்.
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் வெற்றிபெற்ற 14 பெண் எம்எல்ஏக்களில் நடிகை ரோஜாவும் ஒருவர். அவருக்கு துணை முதல்வர் அல்லது அமைச்சர் பதவி கிடைக்கும் என பரவலாக பேசப்பட்டது. ஆனால், அமைச்சரவை பட்டியலில் ரோஜா பெயர் இடம்பெறவில்லை.
அமைச்சர் பதவி இரண்டரை ஆண்டுகளுக்கு மட்டுமே இருக்கும் எனவும் மீண்டும் இரண்டரை ஆண்டுகளுக்கு பின் புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் எனவும் நேற்று நடந்த எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி வெளிப்படையாக அறிவித்து விட்டார் அதன்படி 2வது அமைச்சரவையில் ரோஜாவுக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, ரோஜாவுக்கு விரைவில் சபாநாயகர் பதவி கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும் ஒய்எஸ்ஆர் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
0 comments:
Post a Comment