பாகிஸ்தானில் இருந்து அப்பாவி பெண்களை ஏமாற்றி போலி திருமணம் செய்து கடத்தி செல்லும் சீனர்கள் அங்கு அவர்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாகிஸ்தானில் பணி நிமித்தமாக அல்லது சுற்றுலாவிற்காக வரும் சீனர்கள் அங்குள்ள சட்டவிரோத திருமண மையங்கள் மூலமாக கிறிஸ்துவர்கள், முஸ்லிம்கள் என போலி ஆவணங்களை கொடுத்து அப்பாவி பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொள்கின்றனர்.
நல்ல வசதி, நல்ல வாழ்க்கை என்று பொய் வாக்குறுதி அளிக்கப்பட்டு அந்த பெண்கள் சீனா அழைத்து செல்லப்படுகின்றனர். பெரும்பாலான பெண்கள் கடத்தி அழைத்து செல்லப்படுகின்றனர் மற்றும் பாலியல் தொழிலில் ஈடுபடுவதற்கு கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.
இந்நிலையில் பாகிஸ்தான் அரசு, திருமணம் செய்வதாக கூறி பாகிஸ்தான் இளம்பெண்களை சீனாவிற்கு கடத்தும் கும்பல்கள் குறித்து நடவடிக்கை எடுக்கும்படி சமீபத்தில் மத்திய புலனாய்வு அமைப்புக்கு உத்தரவிட்டு இருந்தது. இதனையடுத்து இளம்பெண் கடத்தல் தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு விசாரணையை தொடங்கியது.
லாகூர் அருகே பசிலாபாத்தில், அந்நாட்டு பெண்ணுக்கும், சீனர் ஒருவருக்கும் திருமணம் நடந்தது. அப்போது 2 சீனர்களை புலனாய்வு அமைப்பு கைது செய்தது.
நேற்று முன்தினம் சீனாவை சேர்ந்த 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து மத்திய புலனாய்வு அமைப்பின் பஞ்சாப் இயக்குனர் தாரிக் ரஷ்டைன் கூறுகையில், “பாகிஸ்தான் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதற்காக கடத்தும் கும்பலை சேர்ந்த சீனாவை சேர்ந்த ஒரு பெண் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
லாகூரில் கடந்த ஓராண்டாக வசித்து வந்த இந்த கும்பலின் தலைவன் கேன்டிசி என்பவனும் கைது செய்யப்பட்டுள்ளான். சீனர்களால் கையகப்படுத்தப்பட்ட இளம்பெண்கள் திருமணம் தொடர்பான ஆவண நடவடிக்கைகள் முடியும் வரை லாகூரில் வாடகை வீடுகளில் தங்கவைக்கப்படுகின்றனர்.
அங்கு அவர்களுக்கு சீனா மொழி கற்றுக் கொடுக்கப்படுகின்றது. அதற்கு பின்னர் அவர்கள் சீனா அழைத்து செல்லப்படுகின்றனர். அங்கு அவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுவதற்கு கட்டாயப் படுத்தப்படுகின்றனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் 100க்கும் மேற்பட்ட இளம்பெண்கள் இதுபோன்று கடத்தப்பட்டுள்ளனர்” என்றார்.
0 comments:
Post a Comment