நாட்டில் நடத்தப்பட்ட பயங்கரவாத குண்டுத்தாக்குதல் தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவிற்கு பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
குறித்த குழுவில் இணைந்து பணியாற்ற அமைச்சர்களான ரவுப் ஹக்கீம், ரவி கருணாநாயக்க, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர்களான பேராசிரியர் ஆசு மாரசிங்க, கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன, காவிந்த ஜயவர்தன, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று கூடியது. இதில் சபாநாயகர் அறிவிப்பு நேரத்தில் இவ்விடயம் சபையில் அறிவிக்கப்பட்டது.
நாட்டின் பல இடங்களில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் குறித்து ஆராய்ந்து குறித்த குழு நாடாளுமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கும் என சபாநாயகர் குறிப்பிட்டார்.
ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் தொடர்பாக ஏற்கனவே நாடாளுமன்ற தெரிவுக்குழுவொன்று அமைக்கப்பட்டு, உறுப்பினர்கள் பெயரிடப்பட்டனர். இக்குழுவே அமைச்சர் ரிஷாட்டிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை குறித்தும் ஆராயும் என ஆளுந்தரப்பு நேற்று நாடாளுமன்றில் குறிப்பிட்டது.
அதற்கு எதிர்த்தரப்பினர் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், குறித்த தெரிவுக்குழுவில் தற்போது மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதாவது, அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆளுநர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பாகவும் இந்த தெரிவுக்குழுவில் விசாரணை நடத்த அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதற்கான யோசனையை பிரதமர் ரணில் நேற்று நாடாளுமன்றில் முன்வைத்து அதன் அங்கீகாரத்தை பெற்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment