பயங்கரவாதிகளை தோற்கடிக்க வேண்டுமாயின் சமூகங்களுக்கு இடையிலான ஒற்றுமை மிகவும் முக்கியம் என ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான தூதுவர் டுங் லாய் மார்கு தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில், அதனை முன்னிட்டு அவர் விடுத்துள்ள செய்தியில் இவ்விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த செய்தியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, ”ஐரோப்பிய தினத்தை கொண்டாடும் இத்தருணத்தில், இலங்கை மக்களுடன் நாம் என்றும் ஒற்றுமையுடன் இருப்போம் என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன். குறிப்பாக ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட ஐரோப்பிய நாடுகளின் பிரஜைகள் உள்ளிட்ட அனைவரையும் இந்நாளில் நினைவுகூருகிறோம். ஒரு புனித நாளில் நடத்தப்பட்ட இந்த தாக்குதல், சுதந்திரத்தின் தாற்பரியம் மற்றும் வழிபடுபவதற்கான உரிமைக்கு எதிரான செயற்பாடுகளாகும்.
இலங்கை தனது தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியத்தை இந்த தாக்குதல் பிரதிபலித்துள்ளது. ஐரோப்பாவும் இந்த சவாலை எதிர்கொள்கின்றது.
குழப்பத்தை ஏற்படுத்தி, வன்முறைகளை தோற்றுவித்து, சமூகங்களை பிரிப்பதே பயங்கரவாதிகளின் நோக்கம். ஆகவே சமூகங்களை நிந்தித்தால், சமூகத்தையும் அரசாங்கத்தையும் கட்டியெழுப்ப தவறினால், சமூகம் பிளவுபட்டால் பயங்கரவாதிகளின் நோக்கம் நிறைவேறிவிடும். அதற்கு இடமளிக்கக் கூடாது.
பயங்கரவாதத்தை எதிர்கொண்ட நாடு என்ற ரீதியில், மனித உரிமை மற்றும் பாதுகாப்பில் உறுதியாக செயற்பட வேண்டும் என்பதை நாம் உணர்ந்துள்ளோம். மனித உரிமையில் காணப்படும் உறுதியற்ற தன்மை பாதுகாப்பை உறுதிப்படுத்தாது. சமூகங்களின் உரிமையை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்துவது பிரிவினைவாதத்தை தோற்றுவிக்கும் என்பதை உலக நாடுகள் உணர்ந்துள்ளன. எவ்வாறாயினும், பயங்கரவாதத்தை தோற்கடிக்க இலங்கையுடன் உறுதியாக கைகோர்க்க ஐரோப்பிய ஒன்றியம் தயராக உள்ளது.
சகல இன்ப துன்பங்களிலும் ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையுடன் கைகோர்த்துள்ளது. கடந்த 4 தசாப்தகாலமாக இலங்கையின் வாழ்வாதார மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு 760 மில்லியன் யூரோக்களை ஐரோப்பிய ஒன்றியம் வழங்கியுள்ளது.
அதுமாத்திரமன்றி ஏற்றுமதி, இறக்குமதி, வரிச்சலுகைகள் உள்ளிட்ட பல விடயங்களில் வழங்கிய ஒத்துழைப்புகளை போல, இலங்கையுடன் என்றும் துணைநிற்போம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment