உயிர்த்த ஞாயிறன்று கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் தற்கொலை குண்டுதாக்குதலை மேற்கொண்ட தற்கொலை குண்டுதாரியின் தலை பெற்றோரினால் இனங்காணப்பட்டுள்ளது.
அலவுதீன் அஹமட் முவாத்தின் என்ற குறித்த தற்கொலை குண்டுதாரியின் தலை பகுதி தனது மகனுடையது என அவரின் பெற்றோர் அடையாளங்கண்டுள்ளனர்.
குறித்த நபரின் மரண விசாரணை கொழும்பு நீதவான் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோதே இந்த விடயம் தெரியவந்துள்ளது.
குறித்த தற்கொலை குண்டுதாரி மட்டக்குளி பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. அத்தோடு உயிரிழந்துள்ள 22 வயதான தனது மகன் சட்டம் குறித்த ஆரம்ப கல்வியை முடித்தவர் என தற்கொலை குண்டுதாரியின் தந்தை தனது சாட்சியில் குறிப்பிட்டுள்ளார்.
சாய்ந்தமருது பகுதியைச் சேர்ந்த தனது உறவினர் ஒருவரின் மகளை திருமணம் செய்துள்ள அவர், பின்னர் ஏப்பரல் மாதம் நடுப்பகுதியில் வீட்டை விட்டு வெளியேறியதாகவும் பின்னர் தனது மகன் உயிரிழக்கும் வேளையிலும் தம்முடன் தொடர்பு கொள்ளவில்லை எனவும் தந்தை தெரிவித்துள்ளார்.
இதனுடன் தற்கொலை குண்டுதாரியின் தாய் மற்றும் அவரின் இரண்டு உறவினர்களும் நீதிமன்றில் சாட்சியம் வழங்கியுள்ளனர்.
கடந்த மாதம் 21ஆம் திகதி இலங்கையின் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் தொடர்பாக அன்றாடம் புதிய தகவல்கள் வெளிவந்துகொண்டிருக்கின்ற நிலையில் கொச்சிக்கடை அந்தோனியார் ஆலயத் தற்கொலை குண்டுதாரி அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment