தீவிரவாத அச்சுறுத்தல் தொடர்பில் இராணுவத் தளபதியின் அறிவிப்பு

தீவிரவாத அச்சுறுத்தலில் இருந்து முழுமையாக விடுபட நீண்ட காலம் தேவைப்படலாம் என கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத் தளபதி அஷாத் இஸ்ஸதீன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இஸ்லாமிய வாழ்வை சரியாகத் தெரியாதவர்களே தீவிரவாதத்தை நாடுகிறார்கள் என்று குறிப்பிட்ட அவர், இந்த தீவிரவாதத்தை ஒழிக்க அனைத்து இன மக்களும் இணைந்து செயற்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
கிழக்கு மாகாணத்தில் படையினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சமூக ஆர்வலர்கள் பங்குபற்றிய கூட்டத்தில் அஷாத் இஸ்ஸதீன் சமகால நெருக்கடி நிலை குறித்து விளக்கினார்.
ஏறாவூர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் படையினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குறித்த விஷேட கூட்டம் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது.
இந்நிகழ்வில் ஊர் பிரமுகர்கள், பள்ளிவாசல்களின் நிர்வாகிகள், மௌலவிமார் மற்றும் சமூக ஆர்வலர்கள் உட்பட இராணுவ உயரதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
இதன்போது கட்டளைத் தளபதி அஷாத் இஸ்ஸதீன் தெரிவிக்கையில், “தற்போது ஏற்பட்டுள்ள தீவிரவாத அச்சுறுத்தல் நாட்டிலுள்ள அனைவரையும் பாதித்துள்ளது.
இலங்கை முஸ்லிம் சமூகம் இலங்கை வரலாற்றில் 1000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்த நாட்டுக்குச் சேவை செய்து வந்திருப்பதை எவரும் குறைத்து மதிப்பட முடியாது. பண்டைய அரசர்கள் தொடக்கம் கடந்த 30 வருடங்களாக நடந்து முடிந்த யுத்தத்திலும் இலங்கை முஸ்லிம்கள் அளப்பரிய பங்களிப்பைச் செய்திருக்கின்றார்கள். எனினும் தற்போது முஸ்லிம் சமூகத்திற்கு ஒரு கறுப்புப் புள்ளி ஏற்பட்டுவிட்டது.
முஸ்லிம்கள் இந்த நாட்டில் எல்லா சமூகத்தாருக்குமிடையில் கலாசார மொழி பண்பாட்டு பொருளாதார அறிவு ரீதியாக இணைப்புப் பாலமாக இருந்திருக்கின்றார்கள்.
தீவிரதவாதம் இத்தோடு முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும். முஸ்லிம் சமூகத்திற்குள்ளிருந்தே இந்தத் தீவிரவாதம் வெளிப்பட்டதால் அதனை முறியடிப்பதற்கு முஸ்லிம் சமூகம் ஒட்டு மொத்தமாக அணிதிரண்டு உதவ வேண்டும்.
மத்ரசா மாணவர்கள் சமூகமயப்படுத்தப்பட வேண்டும். தீவிரவாதிகளாக இயங்குவதற்கு இடமளிக்கக் கூடாது. அவர்களுக்குச் சிறந்த வழிகாட்டி வேலைத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.
முஸ்லிம்களின் செயற்பாடு அடுத்த சமூகத்தாருக்கு ஒரு அசௌகரியமாக இருக்கக் கூடாது. நாம் சிறுபான்மை என்பதால் எமக்குள்ள பொறுப்புக்கள் அதிகம். அடுத்த சமூகத்தாருடன் வாழ்வதற்கு நாம் பயிற்சி பெற வேண்டும்.
தீவிரவாதத் தாக்குலுக்குரிய பொறுப்பை முஸ்லிம் சமூகமே ஏற்றுக்கொள்ள வேண்டும். இஸ்லாமிய வாழ்வை சரியாக அறிந்து புரிந்து வாழத் தெரியாதவர்கள்தான் இந்த தீவிரவாதத்தை நாடுகிறார்கள்.
கற்றுக் கொண்ட பாடத்தினூடாக எதிர்காலத்தை இலங்கையில் வாழும் அனைத்து சமூகத்தாருடன் இணைந்து சிறந்த முறையில் வடிவமைத்துக்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.

Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment