ஈஸ்டர் தாக்குதல்கள் நாட்டின் உல்லாச சுற்றுலாத்துறைக்கும் பொருளாதாரத்திற்கும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
அத்தோடு ஆசிய நாட்டில் அனைவரும் ஈர்க்ககூடிய வகையில் அமைந்துள்ள மலையக பிரதேசங்களை உல்லாச பயணிகள் விரும்பதக்க பிரதேசமாகவும் உல்லாச பயணிகளின் வருகையை அதிகரிக்கும் வகையிலும் அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ள அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.
நுவரெலியா மாவட்டம் மஸ்கெலியா நல்லதண்ணி பிரதேசத்திற்கு நேற்று (சனிக்கிழமை) பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விஜயம் செய்திருந்தார். இதன்போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை குறித்து வருந்துவதாகவும் கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி ஈஸ்டர் தினத்தன்று ஏற்பட்ட அசம்பாவிதங்கள் நாட்டினுடைய உல்லாச பிரயாணத்துறைக்கும் பொருளாதாரத்திற்கும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதாக பிரதமர் கவலை வெளியிட்டார்.
நாட்டினுடைய அபிவிருத்தியில் உல்லாச பிரயாணத்துறை பாரிய பங்களிப்பை வழங்குவதால், நாட்டின் மலையக பிரதேசங்களின் உல்லாச பகுதிகள் விரும்பத்தக்ககூடிய வகையில் அபிவிருத்திகளை முன்னெடுப்பது தமது இலக்கென்றும் பிரதமர் குறிப்பிட்டார். கண்டியில் 10 ஆண்டு அபிவிருத்தி திட்டமாக ஜப்பான் நிதி உதவியுடன் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டம் நுவரெலியா மாவட்டத்திலும் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
அந்தவகையில், பொகவந்தலாவ பிரதேசத்திற்கு உல்லாச பிரயாணிகளுடைய வருகையை அதிகரிப்பதற்காக அங்கு அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக கூறினார்.
அதேபோன்று ஹட்டன் நகரம் தற்போது அபிவிருத்தி அடைந்து வருவதுபோல் நானுஓயா, நுவரெலியா, கித்துல்கல ஆகியவையும் மேலும் அபிவிருத்தி அடைய வேண்டும் என்பது தனது நோக்கமாக உள்ளதென்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.
0 comments:
Post a Comment