கடந்த உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து இடம்பெற்ற அண்மைய சமூக வன்முறைகள் குறித்து தாம் அவதானிப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதுடன் எதிர்காலத்தில் இவ்வாறான தாக்குதல்கள் இடம்பெறாமல் சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.
ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து, ரொமேனியா தூதரகங்கள் மற்றும் ஐக்கிய இராஜ்ஜிய உயர்ஸ்தானிகராலயம், நோர்வே மற்றும் சுவிட்ஸர்லாந்து தூதரகங்கள் ஆகியவற்றுடனான உடன்படிக்கையின் பிரகாரம் பின்வரும் அறிக்கையை ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழு வெளியிட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “அண்மைய வன்முறைகளுடன் தொடர்புபட்டவர்களை கைது செய்தமையை நாம் வரவேற்கின்ற அதேவேளை, சட்டவிதிமுறையை எவ்வேளையிலும் பேணுமாறு அரசாங்கத்துக்கு நாம் கோரிக்கை விடுக்கின்றோம். அத்துடன் சமூக வன்முறைகள் இடம்பெறும் சகல சந்தர்ப்பங்களிலும் குற்றச் செயல்களை புரிந்தவர்கள் மற்றும் தூண்டியவர்கள் மேல் சமமான முறையில் சட்டம் பிரயோகிக்கப்படுவதை உறுதி செய்யுமாறும் கோரிக்கை விடுக்கின்றோம்.
பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் அண்மைய காலங்களில் பயங்கரவாதத் தாக்குதல்களையும் வெறுப்பு குற்றங்களையும் அனுபவித்துள்ளன.
இவற்றின் காரணமாக சமூகங்களில் ஏற்படும் தாக்கங்கள் மற்றும் கால அடிப்படையில் இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெறுகின்றமை நாட்டின் சமூக பரம்பலில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதை நாம் புரிந்து கொண்டுள்ளோம்.
தெளிவான தலைமைத்துவம், வெறுப்புணர்வு மற்றும் வன்முறையை நிராகரிக்கும் செயற்பாடுகள் போன்றன மிகவும் முக்கியத்துவமானவை என்பதுடன், நாட்டின் குடிமக்கள் அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கான சகல செயற்பாடுகளையும் முன்னெடுத்து, அவர்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகளை பாதுகாப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என அரசாங்கத்தை நாம் வலியுறுத்துகின்றோம்.
தொடர்ந்து வன்முறை கிளர்ச்சியை தூண்டுதல் அத்துடன் அவநம்பிக்கையை ஏற்படுத்தல் என்பவற்றிற்கு எதிராக குரலெழுப்புமாறு நாம் சகல அரசியல், சமய மற்றும் இதர சமூகத் தலைவர்களிடமும் கோரிக்கை விடுப்பதுடன், சமூகங்களுக்கிடையே நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்துவதற்கான செயற்பாடுகளையும் மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கின்றோம்.
மேலும் தவறான தகவல்களைப் பரப்பி, வன்முறைகளை தூண்டாமல் இருக்க வேண்டியது நாட்டின் ஊடகங்கள் மற்றும் குடிமக்கள் ஆகியோரின் பொறுப்பு என்பதையும் சுட்டிக்காட்டுகின்றோம்” என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment