இங்கிலாந்தின் லிவர்பூல் உள்ளக அரங்கில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டியின் பயிற்சி ஆட்டங்களில் பங்குபற்ற இலங்கை வலைபந்தாட்டக் குழாம், பொட்ஸ்வானாவுக்குப் பயணமாகவுள்ளது.
அங்கு பொட்ஸ்வானா தேசிய அணியுடன் 3 போட்டிகளிலும் இளையோர் அல்லது கழக மட்ட அணியுடன் 3 போட்டிகளிலும் விளையாடவுள்ளதாக அணியின் முகாமையாளரும் இலங்கை வலைபந்தாட்ட சம்மேளனத்தின் முன்னாள் தலைவியுமான ட்ரிக்ஸி நாணயக்கார தெரிவித்தார்.
இந்தப் போட்டிகள் எதிர்வரும் 23ஆம் திகதி முதல் 30ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.
பொட்ஸ்வானா செல்லும் இலங்கை வலைபந்தாட்ட வீராங்கனைகள் மற்றும் அதிகாரிகளுக்கான விமானப் பயணச் சீட்டுகளை வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச வைபவ ரீதியாக நேற்றுக் கையளித்தார்.
ஆசிய வலைபந்தாட்டப் போட்டிகளில் சம்பியனான இலங்கை வலைபந்தாட்ட அணி வீராங்கனைகளுக்கு சொந்த வீடுகளை வழங்கிய அமைச்சர் சஜித் பிரேமதாச, அப்போது வழங்கிய உறுதிமொழிக்கு அமைய பொட்ஸ்வானாவுக்கான விமானப் பயணச் சீட்டுகளை வழங்கினார்.
நான்கு குழக்களில் 16 நாடுகள் பங்குபற்றும் உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டியில் நடப்பு சம்பியன் ஆஸ்திரேலியா, வட அயர்லாந்து, ஸிம்பாப்வே ஆகிய நாடுகளுடன் குழு ஏயில் இலங்கை இடம்பெறுகின்றது.
உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டிகள் லிவர்பூலில் உள்ள இரண்டு உள்ளக அரங்குகளில் எதிர்வரும் ஜூலை 12ஆம் திகதிமுதல் 21ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.
0 comments:
Post a Comment