சென்னையில் நடைபெறவுள்ள தமிழக அழகி போட்டியை நடத்தவிடாமல் கொலை மிரட்டல் விடுப்பதாக மிஸ் சவுத் இந்தியா, மிஸ் தமிழ்நாடு பட்டம் பெற்ற அழகியும், நடிகையுமான மீரா மிதுன் சென்னை பொலிஸ் ஆணையர் அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
தமிழ் செல்வி என்கிற மீரா மிதுன். சென்னையைச் சேர்ந்த இவர், மிஸ் சவுத் இந்தியா, மிஸ் தமிழ்நாடு, மிஸ் சென்னை உள்ளிட்ட அழகி பட்டங்களைப் பெற்றவர்.
“மிஸ் தமிழ்நாடு டிவா 2019” என்ற அழகிப் போட்டியை வடபழனியில் வருகிற ஜூன் 3 ஆம் திகதி இவர் நடத்த திட்டமிட்டுள்ளார்.
மாடலிங் துறையில் திறமையும், தகுதியும் உள்ள தமிழகத்தைச் சேர்ந்த அழகிகளுக்காக மட்டும் நடத்தப்படவுள்ள இப் போட்டியை மற்ற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் நடத்தவிடாமல் கொலை மிரட்டல் விடுப்பதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக சென்னை பொலிஸ் துறை சைபர் கிரைம் பிரிவில் முறைப்பாடு அளித்த அவர் செல்போன் மூலம் தொடர் மிரட்டல்கள் வருவதாகவும் கூறினார்.
அழகிப் போட்டியை தாம் நடத்தக் கூடாது என்று கேரளாவைச் சேர்ந்த அஜித் ரவி மற்றும் ஜோ மைக்கேல் பிரவீன் ஆகிய இருவர் மிரட்டுவதாகத் தெரிவித்துள்ளார்.
மிஸ் தமிழ்நாடு போட்டியை நடத்தும் அஜித் ரவியுடன் முன்பு தாம் பணிபுரிந்ததாகவும் தற்போது அதிலிருந்து விலகி தமிழக அழகிகளுக்காக தனியாக போட்டி நடத்துவதை தாங்கிக் கொள்ள முடியாமல் கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாக மீரா மிதுன் குற்றம் சாட்டியுள்ளார்.
மாடலிங் துறையில் தமிழக அழகிகள் இனம், நிறம் இவற்றின் அடிப்படையில் திட்டமிட்டு புறக்கணிக்கபடுவதாகவும், அதற்காக தான் தமிழக அழகிகளுக்காக இந்த போட்டியை தான் நடத்துவதாகவும், இதனால் அஜித் ரவி மற்றும் ஜோ மைக்கேல் பிரவீன் இவர்களின் தூண்டுதலால் தனது செல்போனை ஹேக் செய்து அந்தரங்க புகைப்படங்களைத் திருடியுள்ளதாகவும், சமூக வலைதளங்களில் பரப்பி விடப் போவதாக மிரட்டுவதாகவும் முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment