முஸ்லிம் சமூகம் மீதான நம்பிக்கையை மீள கட்டியெழுப்புவது எமது கடமை

முஸ்லிம் சமூகத்தினர் மீதான இழந்த நம்பிக்கையை மீள கட்டியெழுப்புவது எமது கடமை என அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.
இலங்கை மன்றக் கல்லூரியில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”ஒரு அமைச்சர் என்ற ரீதியில் அன்றி, இலங்கையின் முஸ்லிம் அரசியல்வாதி என்ற அடிப்படையில் இங்கு பேசுவதற்கு நான் முன்வந்துள்ளேன்.
ஒரு நாடு என்ற ரீதியில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட தவறினால் பயங்கரவாதச் செயற்பாடுகளை முழுமையாக கட்டுப்படுத்த முடியாது. எனவே, ஒன்றிணைந்து போராட வேண்டியது அவசியமாகும்.
நாட்டில் கலவரத்தை ஏற்படுத்தி, இனங்களுக்கு இடையே மோதல்களை ஏற்படுத்தி, இப்பிரச்சினையை பாரதூரமான நிலைக்கு இட்டுச்செல்வதே ஐ.எஸ். பயங்கரவாதிகளின் இலக்காகக் காணப்படுகிறது. எனவே, பயங்கரவாதிகளின் இந்த சதிக்குள் சிக்கிக் கொள்ளாது கவனமாக செயற்படுவது அவசியமாகும்.
83ஆம் ஆண்டு ஜுலை கலவரத்தின் ஊடாகவே அக்காலப்பகுதியில் விடுதலை புலிகள் அமைப்பு பலமடைந்தது. எனவே, நாம் கவனமாக செயற்பட வேண்டியது அவசியம்.
இலங்கையர் என்ற ரீதியில் நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். நான் இலங்கையர் என்ற அடிப்படையிலேயே வாழ்ந்து வருகிறேன். இதனை என்னால் மாற்றிக்கொள்ள முடியாது.
நாட்டில் குழப்பத்தை விளைவித்த சிறு குழுவினை பார்த்து அனைவரையும் மதிப்பிட வேண்டாம். எம் மீதான நம்பிக்கை வீழ்ச்சியடைய எமது தரப்பிலும் குறைபாடுகள் ஏற்பட்டிருக்கலாம். அதனை மாற்றுவதற்கு நாம் தயார். இலங்கையர் என்ற ரீதியில் நாட்டிற்காக ஒன்றிணைந்து பணியாற்ற தயார்” எனத் தெரிவித்தார்.

Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment