பேஸ்புக் மூலம் காதல் மலர்ந்ததைத் தொடர்ந்து, காதலர்களுக்கு நேற்றையதினம் பெற்றோர் முன்னிலையில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.
அமெரிக்க இளம்பெண்ணுக்கும், தமிழகத்தைச் சேர்ந்த இளைஞருக்குமே இவ்வாறு நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
அமெரிக்காவின் கரோலினாவில் உள்ள சான்போர்டு நகரைச் சேர்ந்தவர் பிரட்டி (22). இவர் தனது பெற்றோருடன் தமிழ் கலாச்சாரத்தை தெரிந்துகொள்வதற்கும், தமிழ் தொடர்பான ஆராய்ச்சி செய்வதற்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை வந்தார்.
சென்னையில் ஒரு வீட்டில் தங்கிய பிரட்டி, பேஸ்புக்கில் தமிழ் கலாச்சாரம் குறித்து தெரிவிக்குமாறு கூறி வந்தார். இந்நிலையில் தான், கடலூர் மாவட்டம் திட்டக்குடியைச் சேர்ந்த சூரிய பிரகாஷ்(25) என்பவர் பிரட்டி அறிமுகமானார்.
அவர் தமிழ் கலாச்சாரம் குறித்த தகவல் மற்றும் புகைப்படங்கள், வீடியோக்களை பேஸ்புக்கில் பதிவு செய்தார். இவ்வாறாக பிரட்டி-சூரிய பிரகாஷ் இடையே ஏற்பட்ட பழக்கம், நாளடைவில் காதலாக மாறியது.
இருவரும் பரஸ்பரம் செல்போனில் பேசி வந்த நிலையில், பெற்றோரிடம் தங்கள் காதல் குறித்து தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, பெற்றோர் மற்றும் உறவினர்கள் சம்மதத்துடன் பிரட்டி-சூரிய பிரகாஷின் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி திட்டக்குடியில் நடந்தது.
இதில் இருவரின் பெற்றோர் மற்றும் உறவினர்களும் கலந்து கொண்டனர். இந்த நிலையில் பிரட்டி இது குறித்து கூறுகையில்,
‘தமிழ் கலாச்சாரம், உடை, உணவு, மனிதர்கள் அன்போடு பழகும் விதம் ஆகியவை எனக்கு மிகவும் பிடித்துள்ளது. எனவே நான் தமிழ் கலாச்சாரப்படி சேலை கட்டி வருகிறேன்.
இங்குள்ள ஒருவரை திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தேன். அப்போதுதான் சூரிய பிரகாஷுடன் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டது. முதலில் நட்பாகத் தொடங்கிய இந்தப் பழக்கம் பின்னர் காதலாக மாறியது.
இருவரது மனமும் ஒத்துப்போனதால் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்து, தமிழ் கலாச்சாரப்படி நிச்சயதார்த்தம் நடந்தது. அமெரிக்காவிலிருந்து உறவினர்கள் சிலர் வரவுள்ளனர். அவர்கள் வந்ததும் திகதி முடிவு செய்யப்பட்டு, தமிழ் கலாச்சாரப்படி இங்கேயே எங்களது திருமணம் நடைபெறும்” என்றார்.
0 comments:
Post a Comment