சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பியுள்ளார்.
சீனாவின் பீஜிங் நகரிலிருந்து இன்று அதிகாலை அவர் இலங்கைக்கு திரும்பியுள்ளார்.
உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த திங்கட்கிழமை சீனாவுக்கு பயணித்திருந்தார். ஆசிய நாகரிகங்கள் குறித்த மாநாட்டில் கலந்துகொள்ளவே ஜனாதிபதி இந்த பயணத்தை மேற்கொண்டிருந்தார்.
அதன்படி குறித்த மாநாட்டில் கலந்துகொண்ட ஜனாதிபதி, இலங்கையில் அண்மைக்காலமாக நிலைகொண்டுள்ள பயங்கரவாதத்தை துடைத்தெறிய அனைத்து நாடுகளும் கைகோர்க்க வேண்டுமென அழைப்பு விடுத்திருந்தார்.
மேலும் இந்த பயணத்தின்போது, சீனா ஜனாதிபதியைச் சந்தித்து கலந்துரையாடியிருந்தார். இதன்போது இலங்கையிலிருந்து பயங்கரவாதத்தை முற்றாக வேரறுக்க அனைத்து உதவிகளையும் வழங்கத் தயாராக உள்ளதாக சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் தெரிவித்துள்ளார்.அத்தோடு இலங்கைக்கான நிதி உதவிகளையும் வழங்குவதாக குறிப்பிட்டுள்ளார்.
அதன் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,நேற்று சீன பிரதமரை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
இதன்போது இலங்கையில் இடம்பெற்ற எதிர்பாராத பயங்கரவாத தாக்குதல் குறித்து தனது அனுதாபங்களை தெரிவித்த சீன பிரதமர், இலங்கை சீன ஜனாதிபதிகளுக்கிடையிலான கலந்துரையாடலின்போது இணக்கம் தெரிவிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பாக தாம் அதிக கவனம் செலுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, பயங்கரவாத சவால்களை வெற்றிகொள்வதற்கு சீன அரசாங்கத்தினால் வழங்கக்கூடிய அனைத்து உதவிகளையும் பெற்றுக்கொடுக்க ஒத்துழைப்பு வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஏற்பட்ட அவசர நிலைமை காரணமாக பாதுகாப்புத் துறையினரின் செயற்பாடுகளுக்காக 260 கோடி ரூபாய் நிதி அன்பளிப்பினை வழங்குதல் மற்றும் பொலிஸ் திணைக்களத்திற்கு தேவையான வசதிகளை வழங்குதல் முதலான செயற்பாடுகளுக்காக சீன அரசாங்கத்திற்கு ஜனாதிபதி இதன்போது நன்றி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment