இந்தியாவில் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு இன்று பதவியேற்கவுள்ள நிலையில், டில்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களைக் கைப்பற்றி இந்த முறையும் அரசு அமைக்கின்றது.
நாடாளுமன்றப் பாரதீய ஜனதாக் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நரேந்திர மோடிக்கு, புதிய பிரதமராகப் பதவியேற்குமாறு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அழைப்பு விடுத்துள்ளார்.
அதையேற்று மோடி இன்று வியாழக்கிழமை மீண்டும் பிரதமராகப் பதவியேற்க இருக்கின்றார். இதன்மூலம் அவர் தொடர்ந்து இரண்டாவது முறையாகப் பிரதமர் ஆகின்றார்.
பதவியேற்பு விழா ஜனாதிபதி மாளிகையில் உள்ள முற்றத்தில் இன்றிரவு 7 மணிக்கு இடம்பெறவுள்ளது. விழாவில் மோடிக்கு, இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பிரதமராகப் பதவிப் பிரமாணமும், இரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைக்கவுள்ளார்.
இம் முறை மோடி அரசு பதவியேற்பு விழாவில் வெளிநாட்டுத் தலைவர்கள் உட்பட சுமார் 8,000 பேர் கலந்துகொள்ளவிருக்கின்றார்கள்.
பதவியேற்பு விழா நடைபெறுவதையொட்டி டில்லியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. டில்லிப் பொலிஸார் மற்றும் துணை இராணுவப் படையினர் என மொத்தம் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மோடி மற்றும் பிற தலைவர்கள் செல்லும் பாதைகளில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். துப்பாக்கி சுடுவதில் திறன் பெற்ற சினைப்பர்தாரிகளும் முக்கிய இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
டில்லியின் பல்வேறு பிரதான வீதிகளில் பொதுமக்கள் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை இந்த வீதிகளை சாரதிகள் பயன்படுத்த அனுமதி இல்லை. மாற்றுப் பாதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment