சூலூர் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மயில்சாமியை ஆதரித்து கமல்ஹாசன் நேற்று 2-வது நாளாக பிரசாரம் செய்தார். சின்னியம் பாளையம், தென்னம் பாளையம், குரும்ப பாளையம், சூலூர் பிரிவு, வாகராயம் பாளையம், கருமத்தம்பட்டி, சோமனூர், இருகூர் உள்ளிட்ட பகுதிகளில் அவர் பிரசாரம் செய்தார்.
தமிழகத்தை மாறி, மாறி ஆட்சி செய்த இரு கட்சிகளையும் நம்பி மக்கள் ஏமாந்து விட்டனர். வரி போட்டு தறியை முடக்கிய மத்திய அரசும், அவர்களுக்கு ஆதரவாக இருக்கும் மாநில அரசும் சரியானவர்கள் அல்ல என்பதை மக்கள் உணர்ந்து விட்டார்கள்.
அதே போல் இவர்களுக்கு மாற்று நாங்கள் தான் என்று கூறும் மற்ற அரசியல் கட்சிகளும் சரிவரவில்லை என்பதை மக்கள் உணர்ந்து விட்டனர். இன்று தமிழகத்தின் மாற்றத்துக்கான விளிம்பில் நாம் நிற்கிறோம். நியாயமான நல்ல அரசியல் தொடக்கத்தை மக்கள் ஏற்பாடு செய்ய வேண்டும்.
தமிழகத்தில் எந்த ஊருக்கு சென்றாலும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. சாக்கடைகள் தெருவில் ஓடுகின்றன. சாக்கடையை சரி செய்யும் படி சொன்னால் அரசோ, சாராய கடைகளை திறக்கிறது.
நமக்கென்ன என்று நாம் ஒதுங்கி நடந்தால் நாடு என்னவாகும் என்பதற்கு இன்றைய தமிழகம் உதாரணமாகும்.
நானும் உங்களில் ஒருவனாக இருந்து இவர்களை வேடிக்கை பார்த்து சலித்து போய் கடைசியில் நாமாவது செயல்பட வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன்.
நான் உங்களுக்காக வந்தேன் என்பதை விட எனக்காக வந்தேன் என்பதே உண்மை.
என்னை 60 ஆண்டுகளாக தூக்கி பிடித்திருக்கும் இந்த மக்களுக்காக நான் செய்தது கலைப்பணி மட்டுமே.
அதையும் ஊதியம் வாங்கி விட்டு தான் செய்தேன். இனி வெறும் கலைஞனாக எனது வாழ்வை முடித்து கொள்ளாமல் உங்களில் ஒருவனாக மனிதனாக வாழ விரும்புகிறேன். எஞ்சிய வாழ்நாளை உங்களுக்காக அர்ப்பணிக்க முடிவு செய்திருக்கிறேன்.
ஜி.எஸ்.டி.யால் நெசவு, கைத்தறி தொழில்கள் பாதிக்கப்பட்டு உள்ளது. இளைஞர்கள் அரசியல் மாற்றத்திற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை உங்களது மூத்த தலைமுறைக்கு எடுத்து கூறுங்கள்.
அவர்கள் குழம்பி தான் போய் இருக்கிறார்கள். அவர்களை என்ன சொல்வது. என்னையும் சேர்த்து தான். என் தலைமுறைக்காரர்கள் குழம்பி விட்டார்கள். இதுவா, அதுவா என்று யோசித்து அரசியலில் நாங்கள் தொடர்ச்சியாக தோற்கும் கட்சிகளுக்கே ஒட்டு போட்டு கொண்டு இருக்கிறோம்.
மக்களை மேம்படுத்தும் கட்சிதான் வெற்றி பெறும் கட்சிகளாக மாற முடியும். அக்கட்சியாக மக்கள் நீதி மய்யத்தை மாற்ற வேண்டியது உங்கள் கடமை.
இந்த 4 சட்ட மன்ற தொகுதிகளில் இருக்கும் கட்சிகள் இருவரும் அரசியல் விளையாட்டாக பார்த்தாலும் நாங்கள் தமிழகத்தை மேம்படுத்த கிடைத்த வாய்ப்பாக அதை பார்க்கிறோம்.
உங்கள் கடமையை நினைவில் கொள்ளுங்கள். நிச்சயம் நாளை நமதாகும்.
இவ்வறு கமல்ஹாசன் பேசினார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment