கந்து வட்டி தகராறில், தந்தையின் கண்முன்னே இளைஞர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம், தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பாணாதுறை பத்துக்கட்டு தெருவில் நடந்துள்ளது.
சிவசுப்பிரமணியன் அருண் (வயது-22) என்பவரே உயிரிழந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பகுதியில் இளைஞனின் தந்தை மளிகை கடை வைத்துள்ளார். அவருக்கு உதவியாக இளைஞனும் வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் குடும்பச் செலவு மற்றும் வியாபாரத்துக்காக பா.ம.க. முன்னாள் நிர்வாகி ஒருவரிடம் ரூபா.7 இலட்சம் வரை தந்தை கடன் வாங்கியிருந்தார்.
ஆனால் கடன் தொகையை திரும்பிக் கொடுக்க முடியாமல் வட்டியாக மட்டுமே பல இலட்சம் ரூபா கொடுத்து வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையே கடன் கொடுத்த பா.ம.க. முன்னாள் நிர்வாகி, கடன் பணத்தைக் கேட்டு அடிக்கடி தொல்லை கொடுத்து வந்துள்ளார். அப்போது ‘கந்து வட்டி போட்டு அசலுக்கு மேலே எங்களிடம் பணத்தை வசூலித்து விட்டீர்கள். இனிமேல் நாங்கள் கடன் தொகையை கொடுக்க மாட்டோம்’ என்று அருண் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக பா.ம.க. முன்னாள் நிர்வாகிக்கும், அருணுக்கும் இடையே காரசாரமாக வாக்குவாதம் நடந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று இரவு மளிகை கடையில் தனது தந்தை சிவசுப்பிரமணியனுடன், அருண் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் அடையாளம் தெரியாத இருவர் மளிகை கடைக்குள் புகுந்தனர்.
அவர்கள் திடீரென அங்கு நின்ற அருணை அரிவாளால் சரமாரியாக வெட்டியதாகக் கூறப்படுகிறது. இதில் நிலைகுலைந்து போன அருண், இரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார்.
தன் கண் முன்னே மகன் வெட்டப்பட்டதைக் கண்டு சிவசுப்பிரமணியன் கூச்சல் போட்டார். இதனால் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
உயிருக்குப் போராடிய அருணை மீட்ட அயலவர் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment