குருநாகல், கம்பஹா, புத்தளம் மாவட்டங்களில் இனவாதிகளின் தாக்குதலுக்குள்ளான பிரதேசங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான முறையில் இழப்பீடுகளை பெற்றுக்கொடுப்பதற்காக, சேத விபரங்கள் தொடர்பில் உரிய மதிப்பீடு செய்வதற்கு விசேட குழுவொன்றை அனுப்பிவைக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் கொட்டாரமுல்லையில் தெரிவித்தார்.
முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனவாத தாக்குதல்களினால் வடமேல் மாகாணத்தில் பாதிப்புக்குள்ளான இடங்களில் வசிக்கும் முஸ்லிம்கள் இன்னும் அச்சத்துடன் இருப்பதனாலும் பாதுகாப்பு நிலைமையை அவதானிப்பதற்காகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் நேற்று இரண்டாவது நாளாகவும் பாதிக்கப்பட்ட சில பிரதேசங்களுக்கு சென்றார்.
குருநாகல் மாவட்டத்தில் சேதமடைந்த முஸ்லிம் கிராமங்களை நேற்று சென்று பார்வையிட்ட அமைச்சர் ஹக்கீம், இன்று புத்தளம் மாவட்டத்தில் நாத்தாண்டிய தொகுதியில் இனவாத வன்செயல்களினால் பெரும் பாதிப்புக்குள்ளான கொட்டராமுல்ல, தும்மோதர மற்றும் புஜ்ஜம்பொல பிரதேசங்களை சென்று பார்வையிட்டார்.
இவற்றில் தும்மோதர கிராமம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. அங்கு முஸ்லிம் குடும்பஸ்தரான பெளசுல் அமீர் என்பவர் காடையர் கும்பலினால் கொலைசெய்யப்பட்டுள்ளார். அவரது வீட்டுடன் இணைந்தாக தச்சுத் வேலைத்தளமும் அமைந்துள்ளது. அங்கு சென்ற அமைச்சர் தாக்குதலுக்குள்ளான அவரது வீட்டையும் எரியூட்டப்பட்ட வாகனத்தையும் பார்வையிட்டார்.
அத்துடன் தாக்குதலுக்குள்ளான தும்மோதர மொஹிதீன் ஜும்ஆ பள்ளிவாசல், உமர் தக்கியா மற்றும் புஜ்ஜம்பொல மொஹிதீன் பள்ளிவாசல் ஆகியவற்றை அமைச்சர் பார்வையிட்டதுடன், பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் மெளலவிமார்களுடனும் தாக்குதலின் பாரதூரம் குறித்து கலந்துரையாடினார்.
அயலிலுள்ள சிங்கள பிரதேசங்களிலுள்ள சந்தைகளில் வியாபாரத்துக்காகச் செல்லும் முஸ்லிம்களை அங்கு தொழிலுக்காக வரவேண்டாமென வெளிப்படையாகவே அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டதாக ஊர் மக்கள் தெரிவித்தனர்.
குறித்த பிரதேசங்களில் தாக்குதலுக்குள்ளான வீடுகள், கடைகள் போன்றவற்றின் சேதங்களை அமைச்சர் பார்வையிடும்போது, வீடுகளிலிருந்த தங்க நகை மற்றும் பெருந்தொகை பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண்கள் முறையிட்டனர்.
வெளியூர்களைச் சேர்ந்த காடையர் கும்பலுடன் அயலவர்கள் சிலரும் சேர்ந்தே, தங்கள் மீது தாக்குதல்கள் நடாத்தியதாக பாதிக்கப்பட்ட மக்கள் அமைச்சரிடம் தெரிவித்தனர். தாங்கள் இன்னும் அச்சத்தின் மத்தியில் இருப்பதினால், இன்னுமொரு அசம்பாவிதம் நடைபெறாதவாறு பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு மக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
0 comments:
Post a Comment