வடக்கு கிழக்கு பகுதிகளில் தொடர்ந்து இடம்பெற்றுவரும் மனித உரிமை மீறல்களை கண்காணிப்பதற்கு ஐ.நா. மனித உரிமைகள் கண்காணிப்பு குழுவொன்றை இலங்கையில் அமைக்கவேண்டும் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக அவர், ஐ.நா. செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்ரஸ்க்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
வடக்கு கிழக்கில் பெருமளவில் இராணுவம் குவிக்கப்பட்டு தமிழர் நிலங்களில் இராணுவ அனுசரணைகளுடன் குடியேற்றங்கள் நடைபெறுவதாகவும் பௌத்த மேலாதிக்கத்தை தொடர்ந்து ஏற்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் நீதியரசர் விக்னேஸ்வரன் இந்த கடிதத்தில் குற்றம் சாட்டியுள்ளார்.
குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இராணுவம் வடக்கு மற்றும் கிழக்கில் குவிக்கப்பட்டுள்ளமை, நாட்டின் ஏனைய பகுதிகளை பயங்கரவாத அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாக்கும் தன்மையை விட்டுக்கொடுக்கும் வகையில் அமைகின்றது.
அதேவேளை, தமிழ் மக்களை அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் அடக்குமுறைக்குட்படுத்தும் வகையில் அவசரகாலச் சட்டத்தை அரசாங்கம் துஸ்பிரயோகம் செய்வதுடன், தமிழர் நிலங்களில் இராணுவ அனுசரணையுடன் குடியேற்றங்கள் நடைபெறுவதற்கும் பௌத்த மேலாதிக்கத்தை தொடர்ந்தும் ஏற்படுத்துவதற்கும் அனுமதிக்கின்றது.
வடக்கு கிழக்கு பகுதிகளில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களை கண்காணிப்பதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கண்காணிப்பு குழுவொன்றை அமைப்பதற்கான அவசியம் குறித்து இரண்டு வருடங்களுக்கு முன்னர் உங்களிடம் விடுத்த கோரிக்கையை அவசரமாக உங்கள் கவனத்துக்கு கொண்டுவருகின்றேன். அத்துடன் மனித உரிமைகள் தொடர்பில் இலங்கைக்கான விசேட பிரதிநிதி ஒருவரை ஐ. நா. மனித உரிமைகள் சபை நியமிக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றேன்.
தமிழ் மக்கள் செறிந்து வாழும் வவுனியாவுக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையில் தற்போது 10 வரையிலான இராணுவ பாதுகாப்பு அரண்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், வவுனியாவுக்கும் கொழும்புக்கும் இடையில் அநேகமாக அப்படியான எந்த பாதுகாப்பு அரண்களும் அமைக்கப்படவில்லை. இராணுவ பாதுகாப்பு அரண்கள் எண்ணற்ற மனித உரிமை மீறல்கள் இடம்பெறும் இடங்களாகவும் தமிழ் மக்கள் குறிப்பாக பெண்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாக்கப்படும் இடங்களாகவும் தன்னிச்சையாக தடுத்துவைக்கப்படும் இடங்களாகவும் இருக்கின்றன.
காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் சமர்ப்பித்துள்ள ஏராளமான மனுக்களை கவனத்திலெடுத்து இலங்கைக்கான ஐ.நா. மனித உரிமைகள் சபையின் விசேட பிரதிநிதி ஒருவரை நியமிக்கவேண்டிய அவசர தேவையை வலியுறுத்துகின்றேன்.
கடந்த 10 வருடங்களில் படையினரால் மேற்கொள்ளப்பட்டதாக முறைபாடு செய்யப்பட்டுள்ள மனித உரிமை மீறல்களையும் இந்த விசேட பிரதிநிதி கவனத்திலெடுக்க வேண்டும். இறுதி யுத்தத்தின்போது இராணுவத்தினரால் கொல்லப்பட்ட மற்றும் கணக்கில் வராமல் காணாமல் போயுள்ள 70,000 க்கும் அதிகமான மக்களை 10ஆவது ஆண்டு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாள் நினைவு கூர்ந்தது. இந்த அப்பாவி மக்கள் தவிர, அரசாங்க படைகளிடம் வெள்ளைக்கொடிகளுடன் சரணடைந்த விடுதலைப்புலிகளின் உயர்மட்ட உறுப்பினர்களும் கொலைசெய்யப்பட்டுள்ளனர்.
ஆகவே, இந்த தருணத்தில், இலங்கையில் யுத்தத்தின்போதும் யுத்தத்துக்கு பின்னரும் நடைபெற்ற, நடைபெறும் மோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கவேண்டிய அவசியத்தை வலியுறுத்துகின்றேன். இது சர்வதேச சட்டம், பாதுகாப்பு ஆகியவற்றின் ஆட்சிக்கும் பிராந்தியத்தின் செம்மைக்கும் மிகவும் முக்கியமானது” என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment