தனது வாக்கு வங்கியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக, ஜனநாயகத்தை மீறும் செயற்பாட்டையே அரசாங்கம் தொடர்ச்சியாக செய்து வருவதாக மஹிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினரான லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.
மாத்தறையில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன இவ்வாறு கருத்து வெளியிட்டார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,
”2009 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதி மஹிந்த ராஜபக்ஷ, இந்த நாட்டுக்கு முழுமையான சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுத்ததையடுத்து அனைவரும் நிம்மதியாகவே வாழ்ந்து வந்தோம்.
இன்று விகாரைக்குச் செல்லக்கூட எமக்கு அச்சமாக இருக்கிறது. மதஸ்தலங்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலைமை ஏற்பட்டுள்ளது. யுத்த காலத்தில் கூட, விகாரைகள் பாதுகாக்கப்பட்டன.
ஆனால் தற்போது, மக்கள் பெரும் அச்சத்துடன் காணப்படுகின்றனர். அத்தோடு, இன்று எமது சமூகத்தை அழிக்கும் நடவடிக்கைகளும் இடம்பெற்று வருகின்றன.
குருணாகலில் கைது செய்யப்பட்டுள்ள வைத்தியர், ஆயிரக்கணக்கான பெண்களுக்கு கருத்தடை செய்துள்ளதாக கூறியுள்ளார்.
எமது பெண்கள் எத்தனைப் பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதைக்கூட, இன்னொருவர்தான் முடிவு செய்துள்ளார். இது மிகவும் பாரதூரமான விடயமாகும்.
அத்தோடு, அன்று மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்ட காலத்தில், அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டபோது, அதனை ஒரு நாளில் சபாநாயகர் விவாதத்திற்கு எடுத்தார். இதற்காக தெரிவுக்குழுவை அமைக்கவில்லை.
ஆனால், இன்று அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ள போதுமட்டும், தெரிவுக்குழுவை அரசாங்கத்தினர் ஸ்தாபித்துள்ளனர்.
உண்மையில், இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு எதிராக எவரேனும் செயற்பட்டால், அவர்களுக்கு இனிமேல் வாக்குக் கேட்டு கிராமங்களுக்குச் செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டும் என்பதைக் கூறிக்கொள்கிறேன்.
தனது வாக்கு வங்கியைத் தக்க வைத்துக் கொள்வதற்காகவே, ஜனநாயகத்திற்கு விரோதமாக இந்த அரசாங்கம் செயற்பட்டு வருகிறது.
ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானமானது, தனிப்பட்ட நோக்கத்திற்காகக் கொண்டுவரப்பட்டதல்ல. எமக்கும், அவருக்கும் எந்தவித தனிப்பட்ட விரோதமும் கிடையாது.
எனினும், இந்தத் தீவிரவாதச் செயற்பாடுகளில் ஈடுபட்டவர்களுக்கு உதவிகளை செய்தார் என்ற கருத்து நிலவி வருகிறது. இதனாலேயே நாம் அவருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவந்துள்ளோம்” என லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment