கொழும்பில் இன்று தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்று, உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் பரவியுள்ள நிலையில், சிறிலங்கா முழுவதும் இன்று பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
இன்று காலை 9 மணிக்கும், 10 மணிக்கும் இடையில் நாவல, வெள்ளவத்தை, பஞ்சிகாவத்தை, கோட்டை தொடருந்து நிலையப் பகுதிகளில் தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பு தொடர் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டிருப்பதாக, பல நாட்களாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் உலாவுகின்றன.
இந்த தகவல்களை பாதுகாப்பு படையினரோ, புலனாய்வுப் பிரிவினரோ உறுதிப்படுத்தவில்லை என்று தெரிவித்துள்ள சிறிலங்கா காவல்துறை பேச்சாளர், எனினும் இதுபோன்ற தகவல்களைத் தாம், இலகுவாக எடுத்துக் கொள்ள முடியாது என்றும் கூறினார்.
இந்த தகவல்களின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்யும் அதேவேளை, பாதுகாப்பை பலப்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, இன்று பாடசாலைகள், அரச நிறுவனங்கள், பொதுமக்கள் கூடுகின்ற இடங்களின் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மற்றொரு காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களுக்குப் பின்னர், இன்று ஆரம்ப பாடசாலைகள் திறக்கப்படவுள்ள நிலையிலேயே இந்த பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த வாரம், 6ஆம் தரம் தொடக்கம், 13ஆம் தரம் வரையுள்ள மாணவர்களுக்கான வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்ட போதும், மாணவர்களின் வருகை குறைவாகவே இருந்தது.
வடக்கு மாகாணத்தில் மாத்திரமே 60 வீதம் மாணவர்களின் வருகை பதிவாகியது. மேல் மாகாணத்தில் மிகச் சொற்ப அளவு மாணவர்களே பாடசாலைகளுக்கு வருகை தந்திருந்தனர்.
0 comments:
Post a Comment