கிழக்கு மாகாணத்தின் ஆளுநராக முன்னாள் ஆளுநர் ரோஹித போகொல்லாகமவை நியமிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு, அமைதிக்கும் சமாதானத்துக்குமான அமையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சொலமன் வெசில் சில்வஸ்டர் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
குறித்த அறிக்கையில், “இலங்கையில் கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலையடுத்து நாட்டில் நிலவிவரும் அசாதாரண சூழ்நிலையைப் போக்கவும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் உயிர்களைப் பணயம் வைத்து பாடுபடும் முப்படையினருக்கும் முதலில் நன்றி கூற பொதுமக்கள் கடமைப்பட்டுள்ளனர்.
கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ரோஹித போகொல்லாகம கிழக்கு மாகாண மக்களினால் மிகவும் நேசிக்கப்பட்டு வருபவர்.
இவர் இன, மத, மொழி பேதமின்றி அனைவரையும் சமமாக நடத்தியவர். இவர் தனது காலத்தில் கிழக்கு மாகாண அபிவிருத்தியிலும் இனங்களுக்கிடையிலான ஐக்கியத்திலும் மிகுந்த அக்கறை காட்டிய ஒருவர். இவருடைய காலத்தில் கிழக்கு மாகாண மக்கள் சந்தோஷத்தை அனுபவித்தார்கள்.
குறிப்பாக இவரது காலத்தில் கலாசார நிகழ்வுகள், பாலர் பாடசாலைகளின் எழுச்சி, சுற்றுலாத்துறை, பொருளாதார வளர்ச்சிக்கான முன்னெடுப்புக்கள் என்பன புத்துயிர் பெற்றன.
அரசாங்கம் தற்போதைய கிழக்கு மாகாணத்தின் சூழ்நிலையை உணர்ந்து முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவை மீண்டும் ஆளுநராக நியமிக்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம்” என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment