மட்டக்களப்பு சீயோன் (Zion) தேவாலயம், அதன் நிர்வாகத்திடம் இன்று (சனிக்கிழமை) ஒப்படைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அங்கு புனரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கடந்த மாதம் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தின வழிபாடுகளின் போது சீயோன் தேவாலயத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதல் காரணமாக அங்கு 29 பேர் உயிரிழந்ததுடன் 74 பேர் படுகாயமடைந்தனர்.
தற்கொலைக் குண்டுத் தாக்குதல் காரணமாக தேவாலயம் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அது தொடர்பில் குற்றப்புலனாய்வுத் துறையினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
இந்தநிலையில் இலங்கையில் ஏனைய பகுதிகளில் தற்கொலை தாக்குதல்கள் காரணமாக பாதிக்கப்பட்ட தேவாலயங்கள் புனரமைக்கப்பட்டு வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் மாத்திரம் நிர்வாகத்திடம் கையளிக்கப்படாத நிலையிலேயே இருந்துவந்தது.
குறித்த தேவாலயம் மீதான தாக்குதல் தொடர்பான விசாரணைகளை தொடர்ந்து நேற்று தேவாலய நிர்வாகத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து இன்று தேவாலயத்தினை தூய்மைப்படுத்தும் பணிகளை ஆலய நிர்வாகத்தினரும் பொதுமக்களும் மேற்கொண்டனர்.
இதன்போது சீயோன் தேவாலயத்தினை பார்வையிடுவதற்காக இந்தியாவில் இருந்தும் போதகர்கள் குழுவினர் வருகை தந்து தேவாலயத்தினை பார்வையிட்டதுடன் பிரார்த்தனைகளிலும் ஈடுபட்டனர்.
இதேவேளை இந்த தேவாலய புனரமைப்பு பணிக்கு அரசாங்கத்தினால் இதுவரையில் எந்தவித உதவியும் வழங்கப்படவில்லையென்று நிர்வாகத்தினர் கவலை வௌியிட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment