காணாமல் ஆக்கப்பட்டோரின் பெற்றோர்கள் மற்றும் உறவுகளே உங்கள் உடன் பிறப்புக்கள், உறவுகளுக்காக முன்னெடுக்கப்படும் நீதிகோரிய போராட்டத்தை மழுங்கடிக்கும் சக்திகளை இனம்கண்டு விழிப்புடன் செயற்படுங்கள்.
இவ்வாறு மன்னார் குடிமக்கள் குழு தெரிவித்துள்ளது. இதுபற்றி அந்தக் குழு விடுத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
காணாமல் போனோரையும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எம் உறவுகளையும் கடந்த 10 வருடங்களுக்கு மேலாகத் தேடி அலையும் எம் தமிழ் உறவுகளே!
காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரும் போராட்டங்களை மழுங்கடிக்கும் நோக்கத்துடன் எம்முடன் இணைந்து செயற்படுவதாக கூறிக்கொண்டு சில விசமிகள் செயற்படுவதாக அறிந்துகொண்டோம். இதை இனங்கண்டு உணர்ந்து சிந்தித்துச் செயற்படுங்கள்.
பணம் தருவதாகக் கூறி ஆசைகாட்டி தமிழர்களின் (தாய்மார்களின்) மானத்தைவிற்று தங்களின் மானங் காக்க எண்ணும் விசமிகளை நம்பாதீர்கள்.
காணாமற் போனோர் பணியகத்துக்கு ஆதரவு வழங்குவதா? இல்லையா? என்பதையும், எதற்கு ஆதரவு வழங்க வேண்டும், எதை தவிர்க்கவேண்டும் என்பதனையும் நீங்களே சிந்தித் துத் தீர்மானியுங்கள்.
பணம் தருவதாக ஆசை வார்த்தை கூறுபவர்களிடம் காணாமல் ஆக்கப்பட்ட எம் உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற நீதியை கேளுங்கள். காணாமல் செய்யப்பட்டவர்களுக்கென்று எந்த அத்தாட்சிப்பத்திரமும் பெற்றுவிடாதீர்கள். முதலில் அரசு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு பதில் சொல்லட்டும், நீதி செய்யட்டும்.
பத்து வருட போராட்ட வரலாற்றுக்குக் கிடைப்பது ஒரு சில ஆயிரம் ரூபாக்கள் தானா? புதியவகைப் போராட்டம் நீதியைத் தேடித்தருமா? அன்றேல் பணமே பிணமாய் மாறி கடையில் கிடக்குமா? சிந்தியுங்கள். பசப்பு வார்த்தைகளை நம்பி நம்பிக்கையை இழந்து விடாதீர்கள் – என்றுள்ளது.
0 comments:
Post a Comment