நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னர் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள பாதுகாப்பு நெருக்கடிகள், நெருக்குதல்களிலிருந்து அப்பாவி முஸ்லிம் மக்களைப் பாதுகாப்பதற்கான சட்ட ஆலோசனைகள், வழிமுறைகள் குறித்து, முன்னாள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா கவனம் செலுத்தியுள்ளார்.
இது தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் பாதுகாப்புத் தரப்பினர் ஆகியோரின் கவனத்திற்குக் கொண்டுவந்துள்ள அவர், இதற்காக ஜம் இய்யத்துல் உலமாவில் விசேட அலுவலகமொன்றை ஏற்பாடு செய்து, இதில் விசேட குழுவொன்றையும் நியமித்து தன்னிடம் சட்ட ஆலோசனைகளைப் பெறுமாறும் ஜம் இய்யத்துல் உலமாவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சர்வதேச பயங்கரவாதத்தின் கைக்கூலியாக உள்ள சில முஸ்லிம் இளைஞர்களை பூண்டோடு அழிப்பதற்கு முஸ்லிம்கள் காட்டி வரும் அக்கறை, ஆர்வத்தை நாட்டின் உயர்மட்டத் தலைவர்களுக்கு அண்மையில் இடம்பெற்ற சந்திப்புக்களில் எடுத்து விளக்கிய பைஸர் முஸ்தபா எம்.பி., பயங்கரவாதிகளுக்கு எதிரான அரசின் நடவடிக்கைகள், அப்பாவி முஸ்லிம்களுக்கு இடையூறாக இருப்பது, தனக்குக் கவலை அளிப்பதாகவும் தெரிவித்தார்.
இந்தவகையில், சந்தேகத்தின் பேரில் கைதாகி சிறைகளில் வைக்கப்பட்டுள்ள அப்பாவி முஸ்லிம்களை அவசரமாக விடுவிப்பதற்கான சட்ட ஆலோசனைகளை ஜம் இய்யத்துல் உலமா நியமிக்கும் விசேட குழுவுக்கு வழங்குவதாகவும் குறிப்பிட்டார்.
முஸ்லிம் சமூகத்துடன் காழ்ப்புணர்ச்சியாகவுள்ள சில தீய கடும் போக்குச் சக்திகள், இன்றுள்ள நிலைமையை முழு முஸ்லிம்களுக்கு எதிராகவும் திருப்ப முயற்சிக்கின்றனர். இவர்களின் இந்தத் தீய சதிகளை அரசுக்குத் தெளிவுபடுத்தி, முஸ்லிம் சமூகத்துக்கு ஆதரவாக அஞ்சாது, முன் நின்று குரல் கொடுக்கும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், ஆளுநர் அஸாத் சாலி ஆகியோரின் சமூக அக்கறையைப் பாராட்டுவதாகவும் தெரிவித்தார்.
மேலும், இந்த நெருக்கடிகளிலிருந்து முஸ்லிம் சமூகத்தைக் காப்பாற்றுவதற்கு முஸ்லிம் அரசியல் தலைவர்கள், சமூகத் தலைவர்கள், பொது அமைப்பினர்கள் போன்றோர் அவசரமாக ஒன்றிணைய வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
முஸ்லிம்கள் ஏதாவது கெடுபிடிகள், இன்னல்களுக்கு முகங்கொடுக்க நேர்ந்தால், உடன் ஜம் இய்யத்துல் உலமா நியமிக்கவுள்ள விசேட குழுவைத் தொடர்பு கொண்டு, விடயங்களைத் தெரியப்படுத்த வேண்டும் என்றும் ஆலோசனை கூறியுள்ளார். அத்துடன், பள்ளிவாசல்கள், அரபு மத்ரஸாக்கள், நிர்வாகிகள் என்போர், தீய சக்திகளின் அச்சுறுத்தல்கள், மிரட்டல்களுக்கு உள்ளாக நேர்ந்தாலும், உடனடியாகவே ஜம் இய்யத்துல் உலமாவுக்குத் தெரியப்படுத்தி, தன்னைத் தொடர்பு கொள்ளுமாறும் முன்னாள் அமைச்சர் பைஸர் முஸ்தபா கோரியுள்ளார்.
0 comments:
Post a Comment