திருமணமாகி குழந்தைகள் உள்ள பெண்ணுடன் தன்னை சேர்த்து வைக்க வேண்டுமென செல்போன் கோபுரத்தில் ஏறி மிரட்டல் விடுத்த காதலனால் பரபரப்பு நிலை ஏற்பட்டது.
இந்தச் சம்பவம், இந்தியாவின் பூந்தமல்லி பகுதியில், நடந்துள்ளது.
திருவேற்காடு பகுதியில் திருமணமான 25 வயதுடைய இளம் பெண் ஒருவர் கணவர் மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் இவர் காணாமல் போனார்.
பூந்தமல்லி பொலிஸ் நிலையத்தில் இவரது கணவர் கொடுத்த முறைப்பாட்டையடுத்து, பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் ஸ்ரீபெரும்புதூரில் வசித்துவந்த முரளி (வயது-30) என்பவரைச் சந்திக்கச் சென்றிருப்பது தெரியவந்தது.
அப் பெண்ணை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தி குழந்தைகள் கணவருடன் வீட்டுக்குச் செல்லுமாறு பொலிஸார் அறிவுறுத்தினர். ஆனால் அவர் வீட்டுக்குச் செல்ல மறுத்துவிட்டுத் தான் காதலன் முரளியுடன் தான் வாழ்வேன் என்று கூறியதாகத் தெரிகிறது.
இதனை ஏற்காத பொலிஸார் பெண்ணின் பெற்றோரை வரச் சொல்லி அவருடன் அனுப்பி வைத்தனர். பின்னர் முரளியை விசாரணைக்கு ஆஜராகுமாறு சொல்லியிருந்த நிலையில் நேற்றிரவு பொலிஸ் நிலையத்துக்கு வந்த முரளி பொலிஸாருடன் வாக்குவாதம் செய்ததாகத் தெரிகிறது.
இதனையடுத்து அருகில் இருந்த செல்போன் கோபுரத்தில் ஏறியவர் தன்னை காதலியுடன் சேர்த்துவைக்கக்கோரி போராட்டம் நடத்தினார். அங்கு வந்த பொலிஸார் அவருடன் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் தன் காதலி நேரில் வந்தால்தான் இறங்குவேன் என்று பிடிவாதமாக் கூறியுள்ளார்.
இதனையடுத்து, காதலி அவ்விடத்திற்கு வந்ததும் முரளி கீழே இறங்கினார். அவரைக் கைது செய்து தற்போது விசாரணை நடத்திவருகின்றனர்.
0 comments:
Post a Comment